

சென்னை
'மெட்ராஸ்' திரைப்படத்தின் அரசியல் தனக்குப் புரியவில்லை என, நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.
நடிகர் கார்த்தி நடிக்கும் 'கைதி' திரைப்படம் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு நேற்று (அக்.7) சென்னையில் நடைபெற்றது. அப்போது பேசிய நடிகர் கார்த்தி, 'மெட்ராஸ்' திரைப்படத்தின் அரசியல் தனக்குப் புரியவில்லை எனத் தெரிவித்தார். மேலும், 'கைதி' திரைப்படத்தால் வீட்டில் நிறைய பிரச்சினைகள் ஏற்பட்டதாகவும், மனைவி, குழந்தையுடன் நேரம் செலவிட முடியவில்லை எனவும் கார்த்தி தெரிவித்தார்.
"நாம் உதவி இயக்குநராக இருக்கும் போது சில கதைகள் யோசித்திருப்போம். அப்படிப்பட்ட கதைகள் எனக்கு இப்போதுதான் வருகின்றன. அப்படிப்பட்ட திரைப்படங்களுள் ஒன்றுதான் 'மெட்ராஸ்'. சுவரை வைத்து ஒருவர் கதை எழுதியிருக்கிறார். அத்திரைப்படத்தில் அவ்வளவு அரசியல் இருக்கிறது என்றனர். ஆனால், எனக்குப் புரியவே இல்லை. ஈரானிய திரைப்படங்களில் காலணியை வைத்தே படம் எடுத்திருக்கின்றனர். ஏன் சுவரை வைத்து படம் எடுக்க முடியாது என்ற யோசனையின் விளைவுதான் 'மெட்ராஸ்' ரைப்படம். ' மெட்ராஸ்' திரைப்படத்தில் என்னுடைய கதாபாத்திரம் பிடித்திருந்தது என சொல்ல மாட்டேன். ஆனால், அந்தக் கதை எனக்குப் பிடித்திருந்தது. அந்தக் கதையில் உள்ள எல்லா கதாபாத்திரங்களும் பிடித்திருந்தன.
'கைதி' கதை மிகவும் சுவாரஸ்யமானது. என் கதாபாத்திரம் மிகவும் பிடித்திருந்தது. தொடர்ந்து இரவு நேர ஷூட்டிங் என்பதால் வீட்டில் பிரசிச்சினைகள் ஏற்பட்டன. மனைவி, குழந்தையுடன் நேரம் செலவழிக்க முடியவில்லை. இத்திரைப்படத்துக்காக லாரி ஓட்டியுள்ளேன். இதன்மூலம், லாரி ஓட்டுநர்களின் பிரச்சினை புரிந்தது. விபத்து நேரங்களில் லாரி ஓட்டுநர்கள் நிற்காமல் போய்விட்டதாக குற்றம் சாட்டுகிறோம். ஆனால் அவர்கள் வேண்டுமென்றே செய்யவில்லை. பிரேக் அடித்தால் லாரி நிற்பதில்லை
ஒரு களத்துக்கு சென்று அந்த கதாபாத்திரத்தைத் தெரிந்துகொண்டு செய்யும் படங்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும். இந்தப் படத்தில் நிறைய சவால்கள் இருப்பது தெரிந்தது. அதை ஆசையுடன் செய்திருக்கிறேன்.
லோகேஷ் பார்வையாளர்களுக்கு படம் எப்படி கொடுக்க வேண்டும் என தெரிந்த இயக்குநர். இதில் எந்தளவு புதிதாக செய்ய முடியுமோ அதை செய்யுங்கள் என சொன்னேன். அதை மொத்தக் குழுவும் செய்திருக்கின்றனர். இந்த படத்தில் நிறைய சண்டை காட்சிகள் உள்ளன. நரேன் உடன் நடித்தது சந்தோஷமான விஷயம். எப்போதும் வாழக்கையில் எதை வேண்டுமானாலும் பகிர்ந்து கொள்ளக்கூடிய நண்பர் அவர்.
ஒவ்வொரு கதாபாத்திரமும் இத்திரைப்படத்தில் வித்தியாசமாக இருக்கும். இந்தப் படத்தில் நான் ஒரு பகுதி தான். இது ஒரு மல்டி ஹீரோ படமாக இருக்கும். எல்லோருக்குமான பகுதி சரியாக அமைந்திருக்கிறது. ஸ்டண்ட் மாஸ்டர் அன்பறிவ் வீட்டுக்கே போகல.
இந்தப் படத்தில் நிறைய விஷயங்கள் புதிதாக கற்றுக்கொள்ள முடிந்தது. இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெறும். எல்லோருக்குமே பெரிய பெயர் வாங்கித் தரும்,".
இவ்வாறு நடிகர் கார்த்தி பேசினார்.