மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு: மத்திய அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு: மத்திய அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள்
Updated on
1 min read

மணிரத்னம் உள்ளிட்ட 49 பேர் மீது தேசத் துரோக வழக்கு போடப்பட்டுள்ளது தொடர்பாக மத்திய அரசுக்கு பாரதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை தொடர்பாகப் பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலகப் பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இது தொடர்பாக இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''இயக்குநர்கள் மணிரத்னம், அடூர் கோபாலகிருஷ்ணன், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசவிரோத குற்றச்சாட்டுப் பதிவு செய்துள்ளதற்கு எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மத வெறுப்புகளை ஏற்படுத்தி வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிடுவது அதிகரித்துள்ளது. அரசை விமர்சித்தாலே ஒருவரை தேசவிரோதி, நகர்ப்புற நக்சல் என முத்திரை குத்துவதை ஏற்கமுடியாது என்று தங்களுடைய கவலையைத் தானே குறிப்பிட்டிருந்தார்கள். இதற்காகத் தேசவிரோத வழக்குப் பதிவு செய்வதை ஏற்கமுடியாது. அரசு சார்பில் பேசியவர்கள், மத்திய அரசுக்கு இதில் தொடர்பில்லை என்று சொல்லியிருக்கிறார்கள்.

கலைஞர்கள் தங்கள் கருத்துகளைத் திரைப்படங்கள் மூலமாகவே பதிவு செய்யவேண்டும், பொது வெளியில் பேசக்கூடாது என்று அச்சுறுத்துவதும், பொய் வழக்குகளின் பேரில் மாற்றுக் கருத்துடையவர்களை மவுனமாக்க முயல்வதும் ஏற்கத்தக்கதல்ல. ஆகவே, மத்திய அரசு உடனடியாக 49 பேருக்கு எதிரான தேசத் துரோக வழக்கினை திரும்பப் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in