

இன்னும் ஓரிரு ஆண்டுகள் கழித்து 'கோமாளி 2' தயாராகும் என்று தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தை சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் 'கோமாளி' பெரும் வரவேற்பைப் பெற்றது.
படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் சில திரையரங்குகளில் 'கோமாளி' திரையிடப்பட்டு வருகிறது. வசூல் ரீதியில் ரூ.50 கோடியையும் கடந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இதை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு.
இந்த விழாவில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் பேசும்போது, "தமிழ் சினிமா தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. சுமார் 150 படங்களுக்கும் மேல் தணிக்கை செய்யப்பட்டு வெளியிட முடியாமல் உள்ளன. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த படமும் எதுவுமே வெளியீட்டுப் பிரச்சினையைச் சந்தித்தது இல்லை என்பதில் மகிழ்ச்சி. எவ்விதத் தடங்கலும் இல்லாமல் படத்தை வெளியிட்டுக் கொடுத்த சக்தி பிலிம் பேக்டரி நிறுவனத்துக்கும் நன்றி.
'எல்.கே.ஜி' மற்றும் 'கோமாளி' ஆகிய படங்களின் வெற்றியைத் தொடர்ந்து அக்டோபர் 11-ம் தேதி 'பப்பி' படத்தையும் வெளியிடவுள்ளோம். மேலும், இயக்குநர் பிரதீப் ரங்கநாதனிடம் ஜெயம் ரவிக்காக கதையொன்றைத் தயார் செய்யுமாறு கூறினேன். அவர் 'கோமாளி 2' பண்ணலாம் என்றார். அதற்கு அந்தப் படம் கண்டிப்பாக ஓரிரு ஆண்டுகளுக்குப் பின் தொடங்கப்படும் என நம்பிக்கை அளித்துள்ளேன்.
இப்போது வேறொரு கதையைத் தயார் செய்யச் சொல்லியுள்ளேன். அந்தக் கதையில் இருவரும் மீண்டும் இணைந்து பணிபுரிவோம் என்ற நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்துள்ளார் ஐசரி கணேஷ்.