

'அசுரன்' படத்தில் முக்குலத்தோர் சமூகம் தொடர்பான வசனத்தை நீக்கியதற்கு இயக்குநர் வெற்றிமாறனுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கருணாஸ் எம்எல்ஏ.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு பெற்றுள்ளதைத் தொடர்ந்து, பல்வேறு ஊர்களில் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டு வருகிறது. 3 நாட்களில் சுமார் ரூ.15 கோடி அளவுக்கு வசூல் செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்கியுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன். இதற்கு கருணாஸ் எம்எல்ஏ நன்றி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக கருணாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இயக்குநர் வெற்றிமாறன் இயக்கி வெளிவந்துள்ள 'அசுரன்' படத்தில் “ஆண்டபரம்பரை நாங்கதான்.. எங்ககிட்டேருந்து உங்களுக்கு இடம் வந்ததா? இல்லை உங்ககிட்டேருந்து எங்களுக்கு இடம் வந்ததா” என்ற வசனம் வரும் இடத்தில் எதிர்த்தரப்பினர் பேசும் உரையாடலில், “எத்தனை நாளாட சொல்லிக்கிட்டே இருப்பீங்க ஆண்ட பரம்பரைன்னு” என்று முக்குலத்தோர் சமூக மக்களை இழிவுபடுத்தும் விதமாக இக்காட்சி வழியாக வரும் உரையாடல் அமைந்திருக்கிறது.
மேற்கண்ட திரைப்பட வசனம் எங்கள் சமூக மக்கள் மனதைப் புண்படுத்தும் விதமாக இருப்பதால் இந்த வசனத்தை நீக்குமாறு இயக்குநர் வெற்றிமாறனிடம் கோரிக்கை வைத்தேன். எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இயக்குநர் வெற்றிமாறன் உடனடியாக நீக்கியுள்ளார். இதற்கு இயக்குநர் வெற்றிமாறனுக்கும் 'அசுரன்' படக் குழுவினருக்கும் நன்றி''.
இவ்வாறு கருணாஸ் தெரிவித்துள்ளார்.
'அசுரன்' படத்தில் கருணாஸின் மகன் கென் கருணாஸ் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் கருணாஸ் இந்தப் படத்தின் வசனத்தை நீக்கச் சொல்லி வேண்டுகோள் விடுத்தது குறிப்பிடத்தக்கது.