இப்படி எடுத்திருந்தால் 'அசுரன்’ உலகத்தரத்துக்குப் போயிருக்கும்! - மூலக்கதை எழுதிய பூமணி  சிறப்புப் பேட்டி

இப்படி எடுத்திருந்தால் 'அசுரன்’ உலகத்தரத்துக்குப் போயிருக்கும்! - மூலக்கதை எழுதிய பூமணி  சிறப்புப் பேட்டி
Updated on
1 min read

இப்படி எடுத்திருந்தால் ‘அசுரன்’ உலகத்தரத்துக்குப் போயிருக்கும் என்று அப்படத்துக்கு மூலக்கதை எழுதிய பூமணி தெரிவித்துள்ளார்.

தனுஷ் நடிப்பில், வெற்றிமாறன் இயக்கத்தில் 'அசுரன்' திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல்ரீதியாகவும் நல்ல வெற்றியை பெற்றுள்ளது. வாலிப வயது பையன்களின் அப்பாவாகவும், விடலப் பையனாகவும் இதில் நடிப்பில் தனுஷ் புதிய உச்சத்தை தொட்டிருக்கிறார். 'அசுரன்' திரைப்படம், கரிசல் மண்ணை சேர்ந்த சாகித்ய அகாடமி விருதுபெற்ற எழுத்தாளர் பூமணி எழுதிய வெக்கை நாவலை மூலக்கதையாகக் கொண்டு வெற்றிமாறன் உருவாக்கியது.

இந்நிலையில் கோவில்பட்டியில் உள்ள எழுத்தாளர் பூமணியை, உங்கள் எழுத்தை சிதைக்காமல் வந்திருக்கிறதா 'அசுரன்' என்னும் கேள்வியோடு சந்தித்தேன். ’’வயதுக்கு ஏற்ற உடல்பாதைகள் இருக்கிறது. அதேநேரம் மனரீதியாக மகிழ்ச்சியாக இருக்கிறேன். அசுரனை முதல்நாளே என் ஊரில் பார்த்தேன். முதல் விஷயம் ஒருநாவலைத் திரைப்படமாக்குகிறார்கள். அது தமிழுக்கு அரிதான விஷயம். இந்த நாவல் எழுதி 38 ஆண்டுகள் கழிச்சும் தாக்குப்பிடிச்சுருக்கு. அதில் சந்தோஷம்.

ஏன்னா திரைப்படத்துறைக்கும், இலக்கியத்துக்கும் ரொம்ப இடைவெளி இருக்கு. கதைக்கு ரொம்ப பஞ்சமாகிப்போச்சு. இலக்கியவாதிக்கும், சினிமாக்காரங்களுக்கும் ஒருங்கிணைப்பு நடக்க வேண்டிய காலமிது. வெக்கையை பொறுத்தவரை கொலை செய்தது சிதம்பரம். ஆனால் காடு, கழனியென அலைந்தது பூமணி தான். சிதம்பரமா என்னை பீல் பண்ணிகிட்டேன். அப்பா கூட வர்ற உணர்வு.

வெக்கையை வட்டார வழக்கு எனச் சொல்ல மாட்டேன். இது மக்களின் மொழி. இந்த பகுதியில் வாழ்கிற மக்களின் மொழிதான். அது அசுரனில் அவ்வளவு சிறப்பா வெளிவந்துருக்குன்னு சொல்ல முடியாது. ஏன்னா, இந்த நாவல் பந்த,பாச உறவுகளுக்காகவும், மொழிக்காகவும் தான் அந்த நாவல் இத்தனை காலம் தாக்குபிடிச்சுருக்கு. ஏன்னா அவர்களுக்கு இந்த வாழ்வியல் பற்றி, மொழி பற்றிச் சரியான புரிதல் இல்லைன்னு தான் தோணுது. மொழி பிரயோகம் பரவாயில்லை என்று சொல்வேன்.

வெற்றிமாறனுக்கு ஏற்கனவே வெக்கை நாவல் சொல்லப்பட்டிருக்கும் என நினைக்கிறேன். நான் சந்திக்கும்போது ஏற்கனவே உங்க நாவலைப் படம் பண்ணனும்ன்னு எடுத்து வைச்சுட்டேன் சார்...ன்னு சொன்னாரு. அவரு படிச்சு பார்த்துட்டு எடுக்கவும் செஞ்சுட்டாரு. என் மூலக்கதையில் பிரபலங்கள் நடித்தது குறித்துக் கேட்கிறீர்கள்.

ஆனால் நான் எழுத்தாளராக இருப்பதனால் பிரபலம் என்று ஒரு பார்வை எனக்கு கிடையாது. சின்ன பையன் கூட நல்லா நடிச்சுருக்கான். அதில் கென்னுன்னு (தனுஷின் இளையமகன்) ஒரு பையன் நடிச்சுருக்கான். பிரமாதமா நடிச்சுருக்கான். என்ன செஞ்சுருக்கணும் இவுங்க இந்த நாவலை...கென்னோட பார்வையிலயே இந்த படம் எடுக்கப்பட்டிருந்தா உலகத்தரத்துக்குப் போயிருக்கும்” என்றும் சொல்லியிருக்கிறார் பூமணி

இதேபோல் ’அசுரன்’ குறித்து மேலும் பல சுவையான தகவல்களோடு, பூமணியின் பார்வையில் அசுரன் எப்படி இருக்கிறது? இலக்கிய உலகம் எப்படி இருக்கிறது என ’இந்து தமிழ்’ இணையதளத்துக்கு அவர் பிரத்தியேகப் பேட்டி அளித்துள்ளார். அதன் வீடியோ இதோ...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in