

இப்போதுள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல ரசனையுள்ளது என்று 'கோமாளி' படத்தின் நன்றி தெரிவிக்கும் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜெயம் ரவி பேசினார்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி, காஜல் அகர்வால், சம்யுக்தா ஹெக்டே, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கோமாளி'. வேல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தைச் சக்தி பிலிம் பேக்டரி வெளியிட்டது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. படம் வெளியாகி 50 நாட்களைக் கடந்தும் சில திரையரங்குகளில் திரையிடப்பட்டு வருகிறது.
வசூல் ரீதியில் 50 கோடியையும் கடந்துள்ளது. இதனால் பெரும் மகிழ்ச்சியில் இருக்கிறது படக்குழு. இதை முன்னிட்டு நன்றி தெரிவிக்கும் வகையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. அதில் நாயகிகளைத் தவிர மற்ற அனைத்து படக்குழுவினருமே கலந்து கொண்டார்கள்.
இந்தச் சந்திப்பில் ஜெயம் ரவி பேசும் போது, "நிறைய விமர்சனங்கள் இருக்கிறது, இல்லையென்று சொல்லவே இல்லை. அது எதற்குத் தேவையோ அதற்கு மட்டும் உள்ளது. ஏற்றுக் கொள்கிறவர்கள் ஏற்றுக் கொள்வார்கள். அதெல்லாம் தாண்டி 'கோமாளி' படம் மக்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இன்று மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். காய்ச்சல் இருக்கும் போது மருத்துவரா, ஷுட்டிங்கா என்று கேட்டால் ஷுட்டிங்கிற்கு தான் செல்வேன். எனக்கு அது தான் சந்தோஷமே. அங்குப் போனால் உடல்நிலை தானாகவே சரியாகிவிடும்.
நல்ல மனிதராக எப்போதுமே இருக்க வேண்டும். நல்ல மனிதராக இருப்பது சாதனை அல்ல. அதையே ஒரு ஐடியாகவாக எடுத்துக் கொண்டு இந்தப் படத்தை பண்ணியிருக்கோம். இன்னும் 10 ஆண்டுகள் கழித்து 'கோமாளி' படத்தைப் பண்ண முடியுமா எனத் தெரியவில்லை. மொபைல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகுள்ள மாற்றம் இப்போது தான் தெரிகிறது. அதை உபயோகிப்பவர்களும், உபயோகிக்காதவர்களும் இப்போது இருக்கிறார்கள்.
நிறையப் பேர் படம் வெற்றியடைந்துவிட்டது, சந்தோஷமாக இருக்கிறீர்களா எனக் கேட்கிறார்கள். ஏன் இப்படிக் கேட்கிறார்கள் என்று தோன்றவே இல்லை. வெற்றியடைந்துவிட்டதால் நான் சந்தோஷமாகவே இல்லை. சந்தோஷமாக இருப்பதால் தான் வெற்றியே வருகிறது. வெற்றியை நினைத்தே வேலை செய்யவில்லை. சந்தோஷமாக வேலை செய்தோம் படம் வெற்றியடைந்துள்ளது. நம்முடைய வேலையில் எப்போதுமே ரொம்ப சின்சியராக இருந்தால் போதும் வெற்றி தானாக வரும். அது தான் உண்மை.
இந்தக் கதை வேறு யாரு யாரோ பண்ண வேண்டியது. இறுதியில் என்னிடம் வந்து நடித்தேன். மக்களை நம்பி நிறைய புதிய முயற்சிகள் பண்றேன். அந்த முயற்சிகள் தோல்வியடைந்தால் மறுபடியும் என்னால் புதிதாக முயற்சி செய்ய முடியாது. அவர்கள் இல்லையென்றால் என்னால் ஒரே மாதிரியான படங்கள் தான் பண்ணிக் கொண்டிருக்க முடியும். இப்போதுள்ள தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நல்ல ரசனையுள்ளது. அது அப்படியே இருக்க வேண்டும் என விரும்புகிறேன்.
இந்தப் படத்தின் மூலம் யோகி பாபு எனக்கு ரொம்ப நண்பராகிவிட்டார். அவரை வைத்து படம் பண்ணப் பேசிக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக அது நடக்கணும் என ஆசைப்படுகிறேன். நிச்சயமாக 'கோமாளி' படத்துக்கு அவர் தூண் தான். எனக்குச் சரிசமமான கதாபாத்திரம் தான். அதை ஒப்புக் கொள்கிறேன். நான் தான் யோகி பாபு வேண்டும் என்று சொன்னேன். அது மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்ததில் சந்தோஷம்” என்று பேசினார் ஜெயம் ரவி.