

வி.ராம்ஜி
‘’’முந்தானை முடிச்சு’ படத்தை இளையராஜாவுக்கும் வைரமுத்துவுக்கும் போட்டுக் காட்டினேன். இளையராஜா கைகுலுக்கினார். பாராட்டினார். ஆனால் வைரமுத்துவோ முகத்தில் லேசான வருத்தத்துடன் ‘படம் நல்லாருக்கு’ என்றார் என இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் இயக்கிய முதல் படம், ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி, கே.பாக்யராஜுக்கு, ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இதையொட்டி, கே.பாக்யராஜ், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
’நாம சேர்ந்து படம் பண்ணி ரொம்ப வருஷமாச்சு’ என்று கங்கை அமரன் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘அடுத்த படம் சேர்ந்து பண்றோம்’ என்று உறுதியளித்தேன். அந்த சமயத்தில், ஏவிஎம் நிறுவனம் படமெடுக்கச் சொல்லிக் கேட்டது. நானும் ஒத்துக்கொண்டேன். அதுதான் ‘முந்தானை முடிச்சு’.
‘படத்துக்கு இளையராஜாதானே இசை’ என்று ஏவிஎம் தரப்பில் கேட்டார்கள். ‘கங்கை அமரன் என்று சொன்னேன். ‘நல்ல, அழகிய, கிராமத்துக் கதையாக வந்திருக்கிறது. இளையராஜா இசையமைத்தால் நன்றாக இருக்கும்’ என்றார்கள். நான் அமருக்கு (கங்கை அமரன்) வாக்குக் கொடுத்துவிட்டேன்’ என்று எவ்வளவோ சொல்லிப்பார்த்தேன். இறுதியில், கங்கை அமரனிடம் ஏவிஎம் தரப்பில் பேசி, இளையராஜா இசைக்கு ஒப்புதல் வாங்கினார்கள்.
ஆனால் இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார். பிறகு ஒருவழியாக சம்மதித்தார். ஒவ்வொரு பாடலையும் ரசித்து ரசித்துப் போட்டுக் கொடுத்தார். அப்போது அந்தப் படத்துக்கு வைரமுத்து பாட்டு எழுதவில்லை.
நான் எப்போதுமே, புதுப்புது பாடலாசிரியர்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருப்பேன். பழைய பாடலாசிரியர்களிடம் பாட்டு வாங்குவேன். நா.காமராசன், குருவிக்கரம்பை சண்முகம், புலவர் சிதம்பரநாதன், முத்துலிங்கம் என்று பாட்டு வாங்கிக் கொண்டிருந்தேன். ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் வைரமுத்து ஒரு பாடலை எழுதியிருந்தார். ‘முந்தானை முடிச்சு’ படத்துக்கு அவர் பாட்டு எழுதவில்லை.
இந்த நிலையில், ஒருநாள் இளையராஜாவை சந்திக்கச் சென்றேன். அவரை ‘முந்தானை முடிச்சு’ படம் பார்க்க அழைத்துச் செல்வதற்காகச் சென்றேன். அங்கே வைரமுத்துவும் இருந்தார். ‘இவர் வைரமுத்து, தெரியும்தானே’ என்று இளையராஜா கேட்டார். ‘நல்லாத் தெரியும்’ என்றேன். எங்கள் இயக்குநர் (பாரதிராஜா) அறிமுகப்படுத்தியவராயிற்றே.
உடனே இளையராஜா, ‘படம் பாக்க வைரமுத்துவும் வரலாமா?’ என்றார். ‘தாராளமா வரட்டும்’ என்றேன். மூவரும் ‘முந்தானை முடிச்சு’ படத்தை இடைவேளை வரை தயாரானதைப் பார்த்தோம்.
படத்தைப் பார்த்துவிட்டு வெளியே வந்த இளையராஜா, ‘படம் நூறுநாள் ஓடும், உறுதி’ என்றார். ‘இன்னும் செகண்ட் ஆஃப் பாக்கலியே’ என்றேன். ‘இதுவே நூறுநாள். முழுசா பாத்தா, நூறுநாள், இருநூறு நாளுக்கும் மேலே’ என்று கைகுலுக்கினார் இளையராஜா.
அப்போது வைரமுத்துவும் என் கைகளைக் குலுக்கினார். ‘நல்லாருக்கு’ என்றார். ஆனால் அவர் முகத்தில் ஒரு வாட்டம் தெரிந்தது. ‘ஒரு நல்ல படத்தில் நாம் ஒரு பாட்டு கூட எழுதவில்லையே’ என்று ஒரு கவிஞருக்கு இருக்கிற ஆதங்கத்தை நான் புரிந்துகொண்டேன்.
ஏற்கெனவே, ‘அந்த 7 நாட்கள்’ படத்தில் ‘எண்ணி இருந்தது ஈடேற கன்னி மனம் இன்று சூடேற’ பாடலை எழுதியிருந்தார். இதையடுத்து அடுத்தடுத்த படங்களில் வைரமுத்துவிடமும் பாட்டுகள் கேட்டு வாங்கி பயன்படுத்தினேன்.
இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
கே.பாக்யராஜ் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு அளித்த பிரத்யேகப் பேட்டியைக் காண: