

விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தில் அவரது நண்பர்களான சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ’தளபதி 64’. இந்தப் படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை. சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இதில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ், சாந்தனு உள்ளிட்டோர் நடித்து வருகிறார்கள். இவர்களுடன் தற்போது ஸ்ரீமன், சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இதில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் இருவரும் விஜய்யின் நெருங்கிய நண்பர்கள்.
கல்லூரி காலத்திலிருந்தே விஜய்க்கு நெருங்கிய நண்பர்களாகவே வலம் வருகிறார்கள். திரையுலகில் விஜய்யுடன் ஆரம்பக்கால கட்டத்தில் சில படங்களில் சஞ்சீவி நடித்துள்ளார். தற்போது நீண்ட வருடங்கள் கழித்து விஜய்யுடன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
'தளபதி 64' படப்பிடிப்பு சென்னையில் படுமும்முரமாக நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு கோடை விடுமுறைக்கு வெளியிடத் திட்டமிட்டுள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.