

வி.ராம்ஜி
‘’சிவாஜியுடன் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படத்தில் ஜாக்ஸன் துரையாக நடிக்கும்போது, நான் பயப்படவே இல்லை. சிறப்பான நடிப்பு என்று சிவாஜி கணேசன் பாராட்டினார்’’ என்று பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் தெரிவித்தார்.
சிவாஜி, ஜெமினி நடித்த மிகப் பிரமாண்டமான படம் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’. இந்தப் படம் வெளியாகி, 60 ஆண்டுகளாகிவிட்டன.
இதையொட்டி, பழம்பெரும் நடிகரும் ஜாக்ஸன் துரையாக நடித்தவருமான சி.ஆர். பார்த்திபன் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு பிரத்யேகப் பேட்டி அளித்தார்.
அவர் அளித்த பேட்டியில் தெரிவித்ததாவது:
எனக்கு சொந்த ஊர் வேலூர். படிப்பதற்காக சென்னைக்கு வந்தேன். பள்ளி, கல்லூரிகளில் நடித்தேன். பிறகு தலைமைச்செயலகத்தில் வேலை பார்த்தேன். அங்கேயும் ஒரு டிராமாவில் நடித்தேன். நிறைய நாடகங்களில் நடித்தேன். அதில் ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ நாடகமும் ஒன்று.
ஜெமினி ஸ்டூடியோவில் வேலைக்கு விண்ணப்பித்தேன். குமாஸ்தா வேலை கிடைக்கும் என நினைத்தேன். அப்போது 88 ரூபாய் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்தேன். அவர்கள் 150 ரூபாய் சம்பளம் தருவதாகச் சொன்னார்கள். அவர்களே முந்நூறு தருகிறேன் என்றார்கள். ஒத்துக்கொண்டேன். மாசச் சம்பளம்.
இந்திப் படத்தில்தான் முதன்முதலாக நடித்தேன். பிறகு கலைஞர் வசனம் எழுதி, எம்ஜிஆர் நடித்த ‘புதுமைப்பித்தன்’ படத்தில் நடித்தேன். ’அன்னையின் ஆணை’ படத்தில்தான் முதன்முதலாக சிவாஜியுடன் நடித்தேன். அதைத் தொடர்ந்து சிவாஜியுடன் 16 படங்களில் நடித்திருக்கிறேன். இதுவரை 120 படங்களில் நடித்திருக்கிறேன்.
இத்தனைப் படங்களில் நடித்தாலும், எனக்கு பேரும்புகழும் வாங்கிக் கொடுத்த படம் என்றால், அது ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ படம்தான். அதில் ஜாக்ஸன் துரையாக நடித்தேன். அவர் எப்பேர்ப்பட்ட நடிகர். நடிப்பில் பல பரிமாணங்களை வெளிக்காட்டியவர். ‘பயப்படாம நடிங்க’ என்றார்கள். ‘எனக்கு எந்த பயமும் இல்ல. ஏன்னா, எனக்கு நடிக்கவே தெரியாது’ என்றேன்.
சக்தி கிருஷ்ணசாமி அந்தப் படத்துக்கு வசனம் எழுதியிருந்தார். அந்த வசனங்களை அவர் பேனாவில் எழுதவில்லை. ரத்தத்தால்தான் எழுதினார் என்று சொல்லுவேன். அந்த அளவுக்கு பிரமாதமாக எழுதியிருந்தார் .
அந்தக் கேரக்டரில், அதாவது ஜாக்ஸன் துரை கேரக்டரில் நான் வசனம் பேசியதையும் நடிப்பதையும் சிவாஜி பார்த்தார். ஒன்றுமே சொல்லவில்லை. சிவாஜியிடம் ஒரு பழக்கம்... சரியில்லை என்றால் முகத்துக்கு நேராகச் சொல்லிவிடுவார். சிவாஜி, ஒன்றும் சொல்லாததே எனக்குப் பெரிய ஆதரவாக, ஆறுதலாக இருந்தது.
இவ்வாறு பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபன் தெரிவித்தார்.
பழம்பெரும் நடிகர் சி.ஆர்.பார்த்திபனின் வீடியோ பேட்டியைக் காண :