‘என் படம் எப்போ ரிலீஸ்னு ஏவிஎம்ல கேப்பாங்க’’ - கே.பாக்யராஜ் பிரத்யேக பேட்டி
வி.ராம்ஜி
‘’என் படம் எப்போ ரிலீஸாகுதுன்னு ஏவிஎம்ல கேப்பாங்க. அதுக்குத் தகுந்த மாதிரி, எங்க படத்தை ரிலீஸ் செய்யணும்னு சொல்லுவாங்க’’ என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ் இயக்கிய முதல் படம், ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 ஆண்டுகளாகின்றன. இதையொட்டி கே.பாக்யராஜுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பாக, நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்காக கே.பாக்யராஜ் பிரத்யேகமாக வீடியோ பேட்டி அளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
சினிமாவை எடுக்கறதுலதான் என் கவனம் முழுவதும் இருந்தது. மற்றபடி எதைப் பற்றியும் எனக்குத் தெரியாது. ஏவிஎம் நிறுவனத்தில், வீரப்பன் என்பவர் வேலை பார்த்து வந்தார். ஏவிஎம் சி தியேட்டரில், என்னுடைய படத்துக்கான ரீரிக்கார்டிங் வேலைகள் நடந்துகொண்டிருக்கும்.
அப்போது வீரப்பன் சர்ரென ஸ்கூட்ட்டரில் அங்கே வருவார். ‘ஆத்தீ... உங்களைப் பாக்கத்தான் வந்தேன். நல்லவேளை, பாத்துட்டேன்’ என்றார். ‘என்ன விஷயம்’என்று கேட்டேன். ‘இப்பப் பண்ணிட்டிருக்கிற படம் எப்போ ரிலீஸ்னு கேட்டுட்டு வரச்சொன்னாங்க’ என்றார்.
‘ஏங்க... என்னங்க இது. என்னோட படம் ரிலீசாகறதுக்கும் ஏவிஎம் படம் ரிலீசாகறதுக்கும் என்னங்க சம்பந்தம்.’ என்று நான் அவரிடம் கேட்டேன். அதற்கு அவர், ‘அப்படி இல்லீங்க. உங்க படமும் எங்க படமும் ஒரே சமயத்துல ரிலீஸானா, க்ளாஷ் ஆகுமில்ல. ஒண்ணு... உங்க படம் வெளியாகறதுக்கு ரெண்டு வாரம் முன்னாடி, எங்க படம் வந்துடணும். இல்லியா... உங்க படம் ரிலீசாகி, ரெண்டு வாரம் கழிச்சு, எங்க படம் ரிலீசாகணும். அதான் கேட்டேன்’ என்றார்.
எனக்கு ஆச்சரியமாக இருந்தது. பிறகுதான் தெரிந்தது. எப்போது படம் ரிலீஸ் செய்வதாக இருந்தாலும், போட்டிப் படங்கள் என்னென்ன, அப்போது விடுமுறை தினங்கள் உண்டா, ரசிகர்களிடம் கையில் காசு இருக்குமா என்றெல்லாம் யோசித்துத்தான் படத்தை வெளியிடுவார்களாம். ரிஸ்க் எடுக்கக் கூடாது, அதேசமயம் படம் வசூல் பெற வேண்டும் என்ற இலக்கணமெல்லாம் புரிந்து உணர்ந்து, படம் ரிலீஸ் செய்தார்கள்.
ஆனால் நான் அப்படியில்லை. ஷூட்டிங் எப்போது என்று தயாரிப்பாளர் கேட்டால், ஸ்கிரிப்ட் ரெடியானாத்தான் ஷூட்டிங் என்று சொல்லுவேன். அதேபோல படம் எப்போ ரிலீஸ் பண்ணலாம் என்று கேட்டால், ‘அதை இப்போது சொல்லமுடியாது. ரீரிக்கார்டிங் ஆரம்பிக்கும் போது சொல்கிறேன்’ என்று சொல்லுவேன். அப்புறம்தான் ரிலீஸ் தேதி அறிவிப்பேன்.
நான் செய்ததெல்லாம் குருட்டாம்போக்கில் செய்தது. ஹிட்டாகி விட்டது என்பதாலேயே, நான் செய்தது சரியென்று சொல்லிவிட முடியாது. அவர்கள் இலக்கணப்படி வியாபார நுணுக்கங்களுடன் படங்களை வெளியிட்டார்கள். ஒருவகையில், அதுதான் சரி.
ஒருமுறை சலன் கூட கேட்டார்... ‘ஏங்க, உங்க ‘அந்த 7 நாட்கள்’ படம் வர்ற சமயத்துல, ஏகப்பட்ட நல்ல படங்களெல்லாம் வருதே. உங்க படம் ஜெயிச்சிரும்னு நம்பிக்கை இருக்கா?’ என்றார்.
‘நிச்சயமா சார். நம்பிக்கை இருக்கு. குதிரை ரேஸ்ல ஒவ்வொரு குதிரையும் ஓடும். நம்ம குதிரைக்குன்னு தனி டிராக் உண்டு. அதுல அதுபாட்டுக்கு ஓடி, ஜெயிச்சிரும். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு’ என்று சொன்னேன்.
இவ்வாறு கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டியில் தெரிவித்தார்.
பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண :
