தங்கர் பச்சான் இயக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்

தங்கர் பச்சான் இயக்கும் டக்கு முக்கு டிக்கு தாளம்

Published on

தங்கர் பச்சான் இயக்கத்தில் அவரது மகன் விஜித் பச்சான் நடித்து வரும் படத்துக்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

'சொல்ல மறந்த கதை', 'அழகி', 'பள்ளிக்கூடம்' என மண் சார்ந்த படங்களை எடுத்துப் பிரபலமானவர் இயக்குநர் தங்கர்பச்சான். 'காதல் கோட்டை', 'மறுமலர்ச்சி', 'கண்ணெதிரே தோன்றினாள்' உள்ளிட்ட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளார். முதலில் திரையுலகில் ஒளிப்பதிவாளராக அறிமுகமானார். பின்பு தான் இயக்குநரானார். தற்போது சில படங்களில் குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தன் மகன் விஜித் பச்சானை நாயகனாக்கி புதிய படமொன்றை இயக்கத் தொடங்கினார் தங்கர் பச்சான். முழுக்க நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்தில் முனீஸ்காந்த் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நாயகிகளாக மிலனா நாகராஜ், அஸ்வினி இருவரும் நடித்துள்ளனர். மன்சூர் அலிகான், ஸ்டண்ட் சில்வா, யோகி ராம் மூவரும் வில்லனாக நடித்துள்ளனர்.

சென்னையில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. முழுக்க சென்னையை மையப்படுத்திய கதை என்பதால் சுமார் 70 நாட்கள் பல்வேறு இடங்களில் படப்பிடிப்பு நடத்தி முடித்துள்ளது படக்குழு. தற்போது இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது. இந்தப் படத்துக்கு 'டக்கு முக்கு டிக்கு தாளம்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது.

விரைவில் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுப் படத்தை விளம்பரப்படுத்தத் திட்டமிட்டுள்ளனர். இசையமைப்பாளராக தரண்குமாரும், ஒளிப்பதிவாளராக பிரபு, தயாளன், சிவபாஸ்கரன் மூவரும் பணிபுரிந்துள்ளனர். பிஎஸ்என் நிறுவனம் தயாரித்து வருகிறது.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in