

'பாட்ஷா 2' தொடர்பான செய்தி உண்மையாக வேண்டும் என்று நானும் காத்திருக்கிறேன் என்று இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா தெரிவித்தார்.
ரஜினி படங்களின் வரிசையில், அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து மாபெரும் வரவேற்பு பெற்ற படம் 'பாட்ஷா'. சுரேஷ்கிருஷ்ணா இயக்கியிருந்த இப்படத்தில் ரஜினி, நக்மா, ரகுவரன், விஜயகுமார் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். தேவா இசையமைத்து இருந்தார். 1995ம் ஆண்டு இப்படம் வெளியானது.
இத்திரைப்படத்தை எப்போது தொலைக்காட்சியில் திரையிட்டாலும், சமூக வலைத்தளங்களில் இப்படம் குறித்து விவாதித்து வருவார்கள்.
இந்நிலையில், 'வீரம் ' சிவா படத்தைத் தொடர்ந்து தனது அடுத்த படத்தை தயாரிக்கும் நிறுவனமாக சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தை தேர்வு செய்திருக்கிறார் அஜித்.
இன்று (21ம் தேதி) காலை முதல் "ரஜினி 'பாட்ஷா 2'-ம் பாகத்தில் நடிக்க மறுத்து விட்டதாகவும், இதையடுத்து அஜீத்தை சுரேஷ்கிருஷ்ணா அணுகி கதை சொன்னதாகவும் அவருக்கு கதை பிடித்து விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே பாட்ஷா 2-ம் பாகத்தில் அஜீத் நடிப்பார் என கூறப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது" என்று செய்திகள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.
இச்செய்தி குறித்து இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணாவைத் தொடர்பு கொண்டபோது, "'பாட்ஷா' தொடர்பான செய்திகள் ஒவ்வொரு முறை வரும்போதும் எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. இம்முறையும் வந்திருக்கிறது.
ஆனால், அச்செய்தியில் உண்மையில்லை. அஜித் படத்தை யார் தான் இயக்க மாட்டேன் என்று சொல்லுவார்கள். இச்செய்தி உண்மையாக வேண்டும் என்று நானும் காத்திருக்கிறேன்" என்று தெரிவித்தார்.