

'அசுரன்' தலைப்புக்கு மிகப் பொருத்தமான நடிகர் தனுஷ் என்று பிரசன்னா புகழாரம் சூட்டியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். நேற்று (அக்டோபர் 4) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தப் படத்துக்கு பல்வேறு திரையுலகப் பிரபலங்கள் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். மேலும், லண்டனில் கார்த்திக் சுப்புராஜ் படத்தின் படப்பிடிப்பில் இருக்கும் தனுஷ், அந்தப் படக்குழுவினருக்கு பிரத்யேக காட்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்து திரையிட்டுக் காட்டியுள்ளார். அவர்களும் 'அசுரன்' படத்தை வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.
தற்போது இந்தப் படம் தொடர்பாக நடிகர் பிரசன்னா தனது ட்விட்டர் பதிவில், "நம்மை வாயடைத்துப் போகவைக்கும் படங்களில் ஒன்று 'அசுரன்'. பழிவாங்கும் கதை எப்படி இருக்கும் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், இந்தப் படம் எப்படி முடிகிறது என்பதுதான் இதை வித்தியாசப்படுத்துகிறது. ஒரு நடிகர் எப்படி தனது வயது, உடல் ரீதியான வரம்புகள் எல்லாவற்றையும் மீறி ஒவ்வொரு முறையும் உருமாற முடிகிறது என்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறேன். என் சகோதரன் தனுஷ் அதை எளிதாகச் செய்கிறார்.
வெற்றி தோல்விகளைக் கடந்துவிட்ட சினிமாவின் நிரந்தரக் கலைஞனாக மக்களின் அபிமானத்தைத் தொடர்ந்து சம்பாதித்துக்கொண்டே இருக்கும் உன்னதக் கலைஞனாக உயர்ந்துகொண்டே இருக்கிறார் தனுஷ் என்றே எனக்குத் தோன்றுகிறது. 'அசுரன்' தலைப்புக்கு மிகப் பொருத்தமான நடிகர். அசுரத்தனமான நடிப்பு" என்று தெரிவித்துள்ளார் பிரசன்னா. தனுஷ் இயக்கத்தில் வெளியான 'ப.பாண்டி' படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் பிரசன்னா என்பது நினைவுகூரத்தக்கது.