மணிரத்னம் மீது தேசத் துரோக வழக்கு: மத்திய அரசை மறைமுகமாகச் சாடிய பி.சி.ஸ்ரீராம்

மணிரத்னம் மீது தேசத் துரோக வழக்கு: மத்திய அரசை மறைமுகமாகச் சாடிய பி.சி.ஸ்ரீராம்
Updated on
1 min read

மணிரத்னம் மீது தேசத் துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருப்பது குறித்து, மத்திய அரசை மறைமுகமாகச் சாடியுள்ளார் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம்

நாட்டில் நடக்கும் கும்பல் வன்முறை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடந்த ஜூலை மாதம் கடிதம் எழுதிய இயக்குநர் மணிரத்னம், ராமச்சந்திர குஹா, அபர்ணா சென் உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத் துரோக வழக்கு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்குப் பதிவு இந்தியத் திரையுலக பிரபலங்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது. இதற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.

இந்த விவகாரம் தொடர்பாக மணிரத்னத்தின் பல படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த பி.சி.ஸ்ரீராம் தனது ட்விட்டர் பதிவில், "இதோ அவர்கள் அதை மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். அடுத்த ஐந்தாண்டுகள் நம் கையில்தான் என்ற எண்ணத்தில் ஆரம்பித்துவிட்டார்கள். கும்பல் வன்முறைக்கு எதிரான திறந்த மடலை இப்போது நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. கதையை இனி எப்படி வேண்டுமானாலும் திரிக்கலாம். ஆனால் நீண்ட நாட்கள் அதையே செய்ய முடியாது.

சரி தேசத் துரோகப் பேச்சு என்றால் என்ன? யாருக்காவது இதில் கருத்து இருக்கிறதா? எல்லா மனிதர்களுக்குமே சொந்தக் கருத்து இருக்கிறது. அப்படியென்றால் எல்லோருமே வழக்குகளைச் சந்திக்க வேண்டுமா? மவுனமாக்குவது ஆபத்தானது. உங்கள் கருத்தைச் சொல்வதே தேசத் துரோகம் என்றால் மக்கள் அனைவருமே அமைதியாக வேண்டும்.

நமது கருத்துகளைச் சொல்வதாலேயே அது தேசத் துரோகம் என்றால் நாம் அனைவருமே அமைதியாகத்தான் இருக்க வேண்டும். அவர்கள் அதிகாரம் கைகளில் இருப்பதால் என்ன வேண்டுமானாலும் செய்வார்கள். பேசுங்கள், பேசுங்கள். மாற்றி யோசியுங்கள். நேராகச் சிந்தித்தால் தேசத் துரோக வழக்கு பாயும். என்ன நடந்தாலும் அதில் நேராக கருத்து சொல்லாதீர்கள்.. தேசத் துரோக வழக்குகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன" என்று தெரிவித்துள்ளார் பி.சி.ஸ்ரீராம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in