

'அசுரன்' படம் நன்றாக உள்ளது என்று 'வெக்கை' நாவலை எழுதிய எழுத்தாளர் பூமணி தெரிவித்துள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார். நேற்று (அக்டோபர் 4) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
எழுத்தாளர் பூமணி எழுதிய 'வெக்கை' நாவலை மையப்படுத்தியே 'அசுரன்' படத்தை உருவாக்கினார் இயக்குநர் வெற்றிமாறன். 'அசுரன்' பார்த்துவிட்டு பூமணி என்ன சொல்லப் போகிறார் என்று பலரும் ஆவலாக எதிர்நோக்கியிருந்தனர்.
'அசுரன்' பார்த்துவிட்டு எழுத்தாளர் பூமணி அளித்துள்ள பேட்டியில், "படம் நன்றாக உள்ளது. வெற்றிமாறன் ரொம்ப பிரமாதமாகப் படமாக்கியுள்ளார். தற்போது திரைப்படத் துறையிலும், சின்னத்திரையிலும் கதைப் பஞ்சம் ரொம்பவே இருக்கிறது. நல்ல நாவல்களை எடுத்து படமாகப் பண்ண வேண்டிய கட்டாயம் இப்போது இருப்பதாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்
’அசுரன்’ வெளியானதைத் தொடர்ந்து, சூரி நாயகனாக நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகளைத் தொடங்கவுள்ளார் இயக்குநர் வெற்றிமாறன்.