'தலைவி' அப்டேட்: எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம்

'தலைவி' அப்டேட்: எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம்
Updated on
1 min read

'தலைவி' என்ற பெயரில் உருவாகவுள்ள ஜெயலலிதா பயோபிக்கில், எம்.ஜி.ஆராக நடிக்க அரவிந்த்சாமி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து, படமொன்றை இயக்கவுள்ளார் இயக்குநர் விஜய். 'தலைவி' என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் ஜெயலலிதாவாக கங்கணா ரணாவத் நடிக்கவுள்ளார். இதற்கான முன் தயாரிப்புப் பணிகள் நடந்து வருகின்றன. சமீபத்தில் கூட வெளிநாட்டிற்குச் சென்று கங்கனாவுக்கு மேக்கப் டெஸ்ட் ஒன்றைச் செய்துவிட்டு வந்தது படக்குழு.

நீரவ் ஷா ஒளிப்பதிவாளராகவும், ஜி.வி.பிரகாஷ் இசையமைப்பாளராகவும் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தப் படத்தை விஷ்ணுவர்தன் இந்தூரி தயாரிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு இறுதியில் படத்தை வெளியிட முடிவெடுத்துள்ளனர்.

தற்போது 'தலைவி' படத்தின் படப்பிடிப்பை நவம்பர் மாதம் மைசூரில் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர். இந்தப் படம் குறித்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே, இதில் எம்.ஜி.ஆராக நடிக்கவுள்ளது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. சில மாதங்களுக்கு முன்பு அரவிந்த்சாமியுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், பேச்சுவார்த்தையின் முடிவு என்ன என்ற தகவல் வெளியாகவில்லை.

தற்போது, அந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்ததாக பாலிவுட் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. எம்.ஜி.ஆராக அரவிந்த்சாமி நடிக்கவுள்ளது உறுதியாகி இருக்கிறது. 1965 முதல் 1973 வரை எம்.ஜி.ஆர் - ஜெயலலிதா ஜோடி 28 வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளது. ஆகையால் எம்.ஜி.ஆர் கதாபாத்திரத்துக்குச் சரியான நபரை நடிக்க வைக்கப் பலரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இறுதியாக அரவிந்த்சாமி நடிப்பது உறுதியாகியுள்ளது.

மைசூரில் நவம்பர் முதல் வாரத்தில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. நவம்பர் 15-ம் தேதி முதல் அரவிந்த்சாமி படப்பிடிப்பில் கலந்து கொள்ளவுள்ளார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் உருவாகிறது.

இயக்குநர் விஜய்க்கு முன்னதாகவே, மிஷ்கினிடம் உதவி இயக்குநராக இருந்த பிரியதர்ஷினியும் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை 'தி அயர்ன் லேடி' என்ற தலைப்பில் படமாக எடுக்க முனைந்து வருகிறார். இதில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நித்யா மேனன் நடிக்கவுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in