

'பட்லர் பாலு' படத்தின் நாயகன் யோகி பாபு என்று வெளியான செய்திக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.
'தர்மபிரபு', 'கூர்கா' ஆகிய படங்கள் வசூல் ரீதியில் வரவேற்பு கிடைத்துள்ளதால், யோகி பாபுவை நாயகனாக வைத்து சில படங்கள் தயாரிப்பில் இருக்கின்றன. அந்தப் படங்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில், சில தினங்களுக்கு முன்பு 'பட்லர் பாலு' படத்தில் யோகி பாபு நாயகனாக நடித்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. அந்தச் செய்தியில், யோகி பாபுவின் நகைச்சுவைக் காட்சிகளுக்கான வசனங்களை இயக்குநர் எஸ்.பி.ராஜ்குமார் எழுதிக் கொடுக்கிறார் என்றும் குறிப்பிட்டு இருந்தனர்.
இந்த இரண்டு தகவல்களையும் யோகி பாபு மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "’தர்மபிரபு’, ’கூர்கா’ என இரண்டு படங்களில் தான் கதையின் நாயகனாக நான் நடித்துள்ளேன். அதன்பின் தொடர்ந்து காமெடியனாகத் தான் பல படங்களில் நடித்து வருகிறேன். 'பட்லர் பாலு' என்ற படத்தில் காமெடியனாக எட்டு வருடங்களுக்கு முன்பு வெறும் நான்கு நாட்கள் மட்டும் தான் நடித்திருந்தேன்.
ஆனால் தற்போது நான் தான் அப்படத்தின் நாயகன் என்பது போல் செய்தியை வெளியிட்டுள்ளனர். அதில் துளியும் உண்மையில்லை. மேலும் எனக்கு நகைச்சுவை சம்பந்தப்பட்ட வசனங்கள் யாரும் எழுதித்தருவதில்லை. அதற்கான அவசியமும் ஏற்படவில்லை. இயக்குநர்கள் தரும் வசனங்களை எனக்குத் தகுந்தாற் போல் சிறிதாக மாற்றிக்கொள்கிறேன்.
அந்த வேலையை நானே செய்துகொள்கிறேன். நகைச்சுவை பாத்திரங்களில் தொடர்ந்து நடித்து மக்களை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் என் ஆசை” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு. இதன் மூலம் 'பட்லர் பாலு' படத்தின் நாயகன் யோகி பாபு அல்ல என்பது தெளிவாகியுள்ளது.