

ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் அடுத்த படத்துக்காக புதிய லுக்கில் அஜித் தோற்றமளிக்கிறார். அந்த லுக் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரங்கராஜ் பாண்டே உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'நேர்கொண்ட பார்வை'. யுவன் இசையமைத்த இந்தப் படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்திருந்தார். போனி கபூர் தயாரித்திருந்தார்.
விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் அஜித் - ஹெச்.வினோத் கூட்டணி இணையவுள்ளது. இதையும் ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து போனி கபூரே தயாரிக்கவுள்ளார்.
இந்தப் படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதில் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார் அஜித். ஏற்கனவே சில படங்களில் காவல்துறை அதிகாரியாக அஜித் நடித்திருப்பதால், இந்தப் படத்தில் அஜித்தின் லுக் எப்படியிருக்கும் என்று எதிர்பார்ப்பு உண்டானது. ஆனால், தனது கெட்டப்பிற்காக உடம்பைக் குறைத்து ஸ்லிம்மாகி இருப்பதாகத் தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், விமான நிலையத்துக்கு அஜித் வந்த போது ரசிகர்கள் அவரோடு எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதில் மீசையைக் குறைத்து, முடியைக் குறைத்து கலரிங் செய்து புதிய கெட்டப்பில் இருக்கிறார் அஜித். சமீபத்திய படங்களில் இது போன்று அஜித், எந்தவொரு படத்திலுமே நடித்ததில்லை. இதனால், இந்த லுக் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
அஜித்துடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.