

'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் தொடர்பாக தனுஷ் ரசிகர்களுக்கு அறிவுறுத்துவதாக அகில இந்திய தனுஷ் தலைமை ரசிகர் மன்றத் தலைவர் சுப்பிரமணிய சிவா வலியுறுத்தியுள்ளார்.
வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், கென் கருணாஸ், டிஜே, பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'அசுரன்'. ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ள இந்தப் படத்தை தாணு தயாரித்துள்ளார்.
இன்று (அக்டோபர் 4) வெளியாகியுள்ள இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வசூல் ரீதியாக எப்படி என்பது நாளை (அக்டோபர் 5) தெரியவரும். இந்தப் படத்தை தனுஷ் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இதற்காக அடிக்கப்பட்ட போஸ்டர்கள் மற்றும் திரையரங்குகளில் போடப்பட்ட வீடியோக்கள் என அனைத்திலுமே 'இளைய சூப்பர் ஸ்டார்' தனுஷ் என இடம்பெற்றிருந்தது.
இதனை வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகிறார்கள். திடீரென்று ஆரம்பித்துள்ள இந்தப் பட்டம் தொடர்பாக அகில இந்திய தனுஷ் தலைமை நற்பணி மன்றத்தின் தலைவர் சுப்பிரமணிய சிவாவிடம் கேட்ட போது, "படத்தில் பயன்படுத்துவதில்லை. தலைமை மன்றத்திலிருந்து போஸ்டர்கள் அடிப்போம். அதில் கூட பயன்படுத்தக் கூடாது என்று முடிவெடுத்துள்ளோம். ரசிகர்களிடமும் உபயோகப்படுத்தாதீர்கள் எனச் சொல்லிக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களுடைய சந்தோஷத்துக்குப் போட்டுக் கொள்கிறோம் எனச் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
ஒவ்வொரு படத்திலுமே ரசிகர்கள் பிரமித்துப் போகும் அளவுக்கு தனுஷ் சார் செய்துவிடுகிறார். அதுதான் தனுஷ் சாருடைய ரசிகர்களுக்கு கவுரவம். படத்தில் போட்டால் வேண்டாம் என்று தனுஷ் சார் சொல்லிவிடுவார். ஆகையால் எங்களுடைய சந்தோஷத்துக்கும், திருப்திக்கும் போட்டுக் கொள்கிறோம் என ரசிகர்கள் சொல்கிறார்கள். மீண்டும் 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் தொடர்பாக ரசிகர்களிடம் வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்தார் சுப்பிரமணிய சிவா.
சமீபத்தில் நடைபெற்ற தனுஷ் பிறந்த நாள் விழாவில் தயாரிப்பாளர் தாணு பேசும் போது, தனுஷுக்கு 'இளைய சூப்பர் ஸ்டார்' பட்டம் வழங்கினார். அதே விழாவில் தனுஷ் பேசும் போது, தனக்குப் பட்டமெல்லாம் தேவையில்லை என்று மறுப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.