

சென்னை விமான நிலையத்தில் பேட்டியளிக்கும் போது ரஜினி, 'தர்பார்' படம் நன்றாக வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகளின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வந்தது. ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.
'தர்பார்' இறுதி நாள் படப்பிடிப்பின் போது, ரஜினியுடன் நடித்தவர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 18-ம் தேதி 'தர்பார்' படப்பிடிப்புக்காக மும்பை சென்றார் ரஜினி. படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதால் எப்போதும் வேண்டுமானாலும் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
அதன்படி நேற்றிரவு (அக்டோபர் 3) சென்னை திரும்பினார் ரஜினி. விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 'தர்பார்' கேள்விகளுக்கு மட்டும் "'தர்பார்' படத்தின் ஷூட்டிங் நன்றாகப் போனது. படமும் நன்றாக வந்துள்ளது" என்று பதிலளித்தார் ரஜினி.
டிசம்பரில் கட்சி தொடங்குவது மற்றும் பிரசாந்த் கிஷோர் உடனான சந்திப்பு உள்ளிட்ட எந்தவொரு கேள்விகளுக்குமே ரஜினி பதிலளிக்கவில்லை.