11 கெட்டப்களில் யோகி பாபு நடிக்கும் ’காவி ஆவி நடுவுல தேவி’
'காவி ஆவி நடுவுல தேவி' என்று பெயரிடப்பட்டுள்ள புதிய படத்தில் 11 கெட்டப்களில் நடித்துள்ளார் யோகி பாபு.
காமெடியனாக வலம் வந்த யோகி பாபு, சில படங்களில் நாயகனாகவும் நடித்து வருகிறார். தற்போது 'காவி ஆவி நடுவுல தேவி' என்ற புதிய படத்தில் 11 கெட்டப்களில் நடித்துள்ளார் யோகி பாபு. மனோன்ஸ் சினி கம்பைன்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. பல படங்களுக்கு வசனம் எழுதிய புகழ்மணி இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
ராம் சுந்தர், பிரியங்கா, தம்பி ராமையா, 'நான் கடவுள்' ராஜேந்திரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்ட பலர் யோகி பாபுவுடன் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் கதை வி.சி.குகநாதன் எழுதியுள்ளார். இந்தக் கதை தொடர்பாக, "11 கெட்டப்புகளில் வந்து காதலைச் சேர்த்து வைக்கும் கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். காதலைப் பிரிக்கும் வில்லனாக 'நான் கடவுள்' ராஜேந்திரனும், மலையாள மாந்திரீகனாக இமான் அண்ணாச்சியும் நடித்துள்ளனர். முழுக்கக் காமெடி பின்னணியில் இந்தக் கதையை எழுதியிருக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்
சண்டைப் பயிற்சியை சூப்பர் சுப்பராயனும், ஒளிப்பதிவை கணேசனும், படத்தொகுப்பை ராஜ் கீர்த்தியும் மேற்கொண்டுள்ளனர். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் திரைக்கு வரும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
