

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் தொடங்கும் எனத் தெரிகிறது.
தற்போது இதில் விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. 'தளபதி 64' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் வில்லனாக விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். மேலும், ஆண்டனி வர்கீஸும் நடிக்கவுள்ளார்.
இன்று (அக்டோபர் 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு 3 மணி மற்றும் 6 மணி என இரண்டு அறிவிப்புகள் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்தது. அதன்படி விஜய்யுடன் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்க சாந்தனு நடிக்கவுள்ளதைப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது.
அதனைத் தொடர்ந்து தற்போது இந்தப் படத்தின் நாயகியாக மாளவிகா மோகனன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு அறிவித்துள்ளது. தமிழில் ரஜினி நடித்த 'பேட்ட' படத்தில் சசிகுமாருக்கு மனைவியாக நடித்தவர்தான் மாளவிகா மோகனன் என்பது குறிப்பிடத்தக்கது. விஜய் படத்தின் மூலம் தமிழில் நாயகியாக வலம் வரவுள்ளார்.
அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்துக்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.