

'தளபதி 64' படத்தில் விஜய்யுடன் நடிப்பது பற்றி சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.
விஜய்யின் தீவிர ரசிகராக வலம் வரும் நடிகர்களில் ஒருவர் சாந்தனு. எப்போதுமே விஜய்க்கு ஆதரவான கருத்துகளைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடுவார். இவரது திருமணத்தை விஜய் தான் தாலி எடுத்துக் கொடுத்து நடத்தி வைத்தார். 'சர்கார்' படத்தின் கதை சர்ச்சை நடைபெற்ற போது கூட, அப்பா பாக்யராஜிடம் சாந்தனு சண்டையிட்டதாகத் தகவல்கள் வெளியாகின.
தற்போது முதன்முறையாக விஜய்யுடன் இணைந்து நடிக்க சாந்தனு ஒப்பந்தமாகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களோடு சாந்தனுவும் நடிக்கவுள்ளார்.
சாந்தனுவுக்கு இந்தப் படம் கண்டிப்பாக ப்ரேக்காக இருக்கும் என்று பல்வேறு திரையுலகினரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். விஜய்யுடன் நடிக்கவுள்ளது குறித்து சாந்தனு தனது ட்விட்டர் பதிவில், "கனவுகள் நிஜமாகும். 'தளபதி 64' படத்தில் விஜய் அண்ணாவுடன் இணைந்து நடிக்கவிருப்பதில் மகிழ்ச்சி. லோகேஷ் கனகராஜின் இந்த வாய்ப்புக்கு நன்றி. பிரிட்டோ சார், லலித் சார் மற்றும் ஜெகதீஷ் ஆகியோருக்கு நன்றி. அன்பான ரசிகர்கள் எப்போதுமே எனக்கு எதெல்லாம் சிறப்பாக இருக்குமோ அதற்கு தான் வாழ்த்துவீர்கள்" என்று தெரிவித்துள்ளார்.
இந்தப் படத்தில் சாந்தனு கல்லூரி மாணவராகவும், விஜய் கல்லூரிப் பேராசிரியராகவும் நடிக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்யவுள்ளார். அடுத்த வாரம் இதன் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தெரிகிறது.