

எங்களையும் பிழைக்க வைங்க தலைவா என்று தன்னிடம் சீண்டிய ரசிகருக்குப் பதிலடிக் கொடுத்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு. இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. இந்தப் படத்தைப் பார்த்த மலேசியக் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெகுவாகப் பாராட்டியிருந்தார். இதற்கு 'ராட்சசி' படக்குழுவினர் சார்பாக ஜோதிகா நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், 'ராட்சசி' படக்குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்தார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கெளதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கர் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி ஆகியோர் மலேசியா சென்றனர்.
இது தொடர்பான புகைப்படங்களைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு. தங்களது குழுவினருக்கு மிகப்பெரிய பெருமை என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த ட்வீட்டுக்கு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவை ட்விட்டர் தளத்தில் பின்தொடர்பவர் கிண்டலாக "நானும் அந்த ’ராட்சசி’ய பாத்துடலாம்னு தமிழ்கன் ல ட்ரை பன்றேன் டவுன்லோடு எர்ரர்னே காமிக்குதுப்பா என்ன செய்யலாம்?" என்று கிண்டலாகக் கேட்டார்.
அவருக்குப் பதிலடிக் கொடுக்கும் வகையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, "கொஞ்சம் காசு செலவு பண்ணி அமேசான் ப்ரைமில் உறுப்பினராகி 'ராட்சசி' மட்டுமல்லாம இன்னும் 100 படம் கௌரவமா பாக்கலாம். இல்ல இன்னும் ஒரு வாரத்துல விஜய் தொலைக்காட்சியில் இலவசமா பாக்கலாம். எங்களயும் பொழைக்க வைங்க தலைவா! உங்க புள்ள குட்டிங்க எல்லாம் நல்லா இருக்கும்" என்று தெரிவித்தார். இந்தப் பதிவு இணைய வாசிகள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
எஸ்.ஆர்.பிரபுவின் இந்தப் பதிவுக்கு இயக்குநர் பார்த்திபன் தனது ட்விட்டர் பதிவில் "ஆமாம் சார். பிரபுக்களே கெஞ்சும் போது பஞ்ச பிரபுக்கள் பிச்சையெடுக்க வேண்டியுள்ளது களவு நிறைந்த வணிகத்திடம்....! திருடனாய் பார்த்துத் திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது!" என்று குறிப்பிட்டுள்ளார்.