

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் ஆண்டனி வர்கீஸ் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
'பிகில்' படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கத் தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். இதன் படப்பிடிப்பு அக்டோபர் முதல் வாரம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், தற்போதுள்ள நிலவரப்படி 2-ம் வாரம் தான் தொடங்கும் எனத் தெரிகிறது.
கடந்த சில நாட்களாகவே விஜய்யுடன் நடிக்கவுள்ளவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வந்தது. வெளிநாட்டிலிருந்து விஜய் திரும்பியவுடன் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி நேற்று (செப்டம்பர் 30) வெளிநாட்டிலிருந்து விஜய் சென்னை திரும்பினார்.
நேற்று (செப்டம்பர் 30) மாலையே விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்தது. மேலும், தொடர்ச்சியாக 3 நாட்கள் 'தளபதி 64' தொடர்பான அறிவிப்பு மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவித்தது.
படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக வெளியான அறிவிப்பைத் தொடர்ந்து, இன்று (அக்டோபர் 1) மாலை 5 மணியளவில் ஆண்டனி வர்கீஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மலையாளத்தில் முன்னணி நடிகராக வளர்ந்து வரும் இவர் 'அங்காமலே டைரீஸ்', 'ஜல்லிக்கட்டு' உள்ளிட்ட படங்களில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் விஜய் சேதுபதியுடன் வரும் மற்றொரு வில்லனாக நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
படப்பிடிப்பு எப்போதும் தொடங்கும் என்பதை இன்னும் படக்குழு அறிவிக்கவில்லை. அனிருத் இசையமைக்கவுள்ள இந்தப் படத்தை சேவியர் பிரிட்டோ தயாரிக்கவுள்ளார்.