

ஜோதிகா நடிப்பில் வெளியான 'ராட்சசி' படக்குழுவினருக்கு மலேசியக் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் விருந்து அளித்துள்ளார்.
கெளதம்ராஜ் இயக்கத்தில் ஜோதிகா, பூர்ணிமா பாக்யராஜ், ஹரிஷ் பெரடி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'ராட்சசி'. ட்ரீம் வாரியர் நிறுவனம் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்தாலும், வசூல் ரீதியாகப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஜூலை 5-ம் தேதி இந்தப் படம் வெளியானது.
இந்தப் படத்தைப் பார்த்த மலேசியக் கல்வி அமைச்சர் மாஸ்லி மாலிக் தனது சமூக வலைதளப் பக்கத்தில், "கண்டிப்பாக, இது அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம். இதன் கதை அற்புதமாக இருக்கிறது. கதாபாத்திரங்களும் அருமை. கல்வி அமைச்சராக இந்தப் படத்தைப் பார்ப்பது வித்தியாசமான உணர்வாக இருக்கிறது. ஒவ்வொரு காட்சியையும் நம் நாட்டின் சூழலோடு என்னால் பொருத்திப் பார்க்க முடிந்தது. கீதா ராணி ஒரு பெரிய சூப்பர் ஹீரோ கதாபாத்திரம். பெரிய மாற்றம் என்பது சாத்தியமில்லை என்பதை அவர் நமக்கு நிரூபிக்கிறார்" என நீண்ட பதிவின் மூலமாகப் புகழாரம் சூட்டினார். இதற்கு 'ராட்சசி' படக்குழுவினர் சார்பாக ஜோதிகா நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில், 'ராட்சசி' படக்குழுவினரை நேரில் பாராட்ட மலேசியா அழைத்தார் அந்நாட்டின் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். இதனைத் தொடர்ந்து தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு, இயக்குநர் கெளதம் ராஜ், இணை தயாரிப்பாளர் அரவிந்த் பாஸ்கர் மற்றும் வசனகர்த்தா பாரதி தம்பி ஆகியோர் மலேசியா சென்றனர்.
நேற்று (செப்டம்பர் 30) படக்குழுவினருடன் மீண்டும் மலேசியாவில் உள்ள ஆர்.ஜி.வி திரையரங்கில் 'ராட்சசி' படத்தைப் பார்த்தார் கல்வி அமைச்சர் மாஸ்லே மாலிக். பிறகு படக்குழுவினருக்குப் பெரிய விருந்து ஒன்றையும் அளித்துள்ளார். இதனால் படக்குழுவினர் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.