

'தேவர் மகன் 2' கதை தயாராக இருப்பதாக, 'பிக் பாஸ்' போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்ட இயக்குநர் சேரன் தெரிவித்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி 'பிக் பாஸ்' சீசன் 3. கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி அவ்வப்போது சர்ச்சையாகி வருகிறது. சமீபத்தில் இந்நிகழ்ச்சியிலிருந்து இயக்குநர் சேரன் வெளியேற்றப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கமல் நடிக்கும் படத்தை இயக்கவுள்ளார் சேரன் எனத் தகவல் பரவியது. இது தொடர்பாகத் தனது ட்விட்டர் பதிவில் கூட எந்தவொரு பதிலையும் சேரன் தெரிவிக்கவில்லை. இந்நிலையில், வடபழனியில் உள்ள கமலா சினிமாஸ் திரையரங்கில் 'நம்ம வீட்டுப் பிள்ளை' படம் பார்த்தார் சேரன். அதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார்.
அப்போது, "கமல் வைத்து படம் இயக்கப் போவதாகத் தகவல் உலவிக் கொண்டிருக்கிறதே" என்று கேள்வி எழுப்பினர். அதற்கு இயக்குநர் சேரன், "அந்தத் தகவலைப் பற்றி நான் என்ன சொல்வது?. அந்த மாதிரியான எந்தவொரு பேச்சுவார்த்தையுமே கிடையாது. கமல் சாரை உள்ளே போகும்போதும், வெளியே வரும்போதும் சந்தித்தேன். அப்போது அவருடன் மேடையில் 15 நிமிடங்கள் இருந்தேன். அந்தச் சமயத்தில் அவரிடம் இதெல்லாம் பேச முடியாது.
முன்பு, ஒருமுறை அவரிடம் 'தேவர் மகன் 2' பண்ணலாம் சார். கதை இருக்கிறது எனச் சொல்லியிருக்கிறேன். அதை அனுமதித்தால், அவர் சொல்லும்போது கதை சொல்லி ஒ.கே ஆனால் தான் நடக்கும்" என்று பதிலளித்துள்ளார் சேரன்.
தற்போது விஜய் சேதுபதி நடிக்கவுள்ள படத்தின் பணிகளை மேற்கொள்ளவுள்ளார் இயக்குநர் சேரன். இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரிகிறது.