

தணிக்கையில் 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, 'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
வெற்றிமாறன் - தனுஷ் கூட்டணியில் உருவாகியுள்ள 4-வது படம் 'அசுரன்'. 'வெக்கை' நாவலைத் தழுவி இந்தக் கதையை உருவாக்கியுள்ளனர். தாணு தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு கோவில்பட்டியைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றது.
அக்டோபர் 4-ம் தேதி படத்தின் வெளியீடு என்று முடிவு செய்யப்பட்டாலும், அதிகாரபூர்வமாகப் படக்குழு கூறாமல் இருந்தது. இறுதிக்கட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தன. லண்டனில் நடைபெற்று வரும் கார்த்திக் சுப்புராஜ் படப்பிடிப்புக்கு இடையே, ’அசுரன்’ படத்தின் டப்பிங் பணிகளை தனுஷ் முடித்து அனுப்பிவைத்தார்.
அதனை வைத்து இறுதிக்கட்டப் பணிகளை முடித்து, தணிக்கைக்கு விண்ணப்பித்தது படக்குழு. படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 4-ம் தேதி 'அசுரன்' வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
'அசுரன்' படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டதால், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதற்கு இடையே, மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிக்கவுள்ள படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகளையும் மேற்பார்வையிட்டு வருகிறார்.