

'ஒத்த செருப்பு' படம் பார்த்துவிட்டு 'இதுக்கு மேல என்ன பண்ணுவ' என்று பார்த்திபனிடம் கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
சமீபத்தில் இந்தப் படத்தை இசையமைப்பாளர் இளையராஜாவுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளார் பார்த்திபன். படம் முடிந்து வெளியே வந்தவுடன் அங்கிருந்த பார்த்திபனிடம் 'இதுக்கு மேல என்ன பண்ணுவ' என்று கேள்வி எழுப்பியுள்ளார் இளையராஜா.
'ஒத்த செருப்பு' தொடர்பாக இளையராஜா பேசும்போது, "தமிழ்த் திரையுலகிற்கு புதிய ஆரோக்கியமான ஒரு முயற்சி. இதை MONO ACTING என்று சொல்வார்கள். ஆனால், அதில் ஒரு கதை வைத்து, கேரக்டர்கள் எல்லாம் வைத்து ரொம்ப அழகாக திரைக்கதை பண்ணியிருக்கார் பார்த்திபன்.
மக்கள் திரண்டு வந்து பார்ப்பார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. பார்த்திபன் வாழ்க. என்றும் போல் வித்தியாசமான முறையிலே, வருங்காலத்திலும் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை" என்று தெரிவித்துள்ளார் இளையராஜா.
'ஒத்த செருப்பு' படத்தை இந்தியாவிலிருந்து ஆஸ்கர் விருதுக்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்றாலும், நேரடியாக அனுப்பும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார் பார்த்திபன். மேலும், தன் அடுத்த படத்துக்கான முதற்கட்டப் பணிகளையும் தொடங்கியுள்ளார்.