

விஜய்க்கு எதிராக யார் பேசினாலும் கவலையில்லை என்று நாகர்கோவிலில் எஸ்.ஏ.சி தெரிவித்தார்.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த ’பிகில்’ திரைப்படம் தீபாவளிக்குத் திரைக்கு வரவுள்ளது. இதன் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. அதில் விஜய் பேசும்போது, சுபஸ்ரீ மரணம் தொடர்பாக சில கருத்துகளை முன்வைத்தார். மேலும், யாரை எங்கு வைக்க வேண்டுமோ அவர்களை அங்கு வைக்க வேண்டும் என்று தன் பேச்சில் குறிப்பிட்டார்.
இது அரசியல் ரீதியாக சர்ச்சையை உருவாக்கியது. தமிழக அமைச்சர்கள் பலரும் விஜய்யின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சில ஆதரவு தெரிவித்துள்ளன. இந்நிலையில் நாகர்கோவிலில் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார்.
சுபஸ்ரீ மரணம் தொடர்பான விஜய் பேச்சு தொடர்பான கேள்விகளுக்கு எஸ்.ஏ.சி, "’பிகில்’ இசை வெளியீட்டு விழா நடந்த கல்லூரி மீதான நடவடிக்கைக்கு கல்லூரிதான் பதில் சொல்ல வேண்டும். அதற்கு நான் பதில் சொல்ல முடியாது. சுபஸ்ரீ மரணத்துக்குப் பிறகு பலரும் பேசினார்கள். அதே போல் விஜய்யும் பேசினார். அதற்கு எதிராக யார் பேசினாலும், எங்களுக்குக் கவலையில்லை.
தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்ணுக்கு இந்தக் கதி நடந்துள்ளது. அதைப் பற்றிப் பேச அனைவருக்கும் உரிமையுள்ளது. அதே மாதிரி அவரும் பேசினார். அதே போல், அரசியல் தொடர்பான கருத்துகளை யார் வேண்டுமானாலும் பேசலாம். அரசியல் சட்டத்திலேயே நமக்கு அதற்கு உரிமை கொடுத்திருக்கிறார்கள். ஒரு பெண்ணுக்கு இப்படி நடந்ததற்குச் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்று அனைவருமே சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அவர் மட்டும் சொல்லவில்லை.
விஜய் மனதில் என்ன நினைத்துக்கொண்டு பேசினார் என்பது அவருக்குத்தான் தெரியும். ஆளுங்கட்சியைச் சொன்னாரா, எதிர்க்கட்சியைச் சொன்னாரா என்று எனக்குத் தெரியாது. 'பிகில்' படத்துக்குப் பிரச்சினை வரும் என நினைக்கவில்லை. விஜய் மக்கள் இயக்கம் எப்போது அரசியல் கட்சியாக உருவாகும் என்பது விஜய்க்குத்தான் தெரியும். அவரைப் பற்றி என்னால் கருத்து சொல்ல முடியாது. அவர் இப்போது குழந்தையில்லை. விஜய் கருத்து சொன்னால் எதிர்ப்பு வருகிறது என்றால், அவர் வளர்ந்து கொண்டு இருக்கிறார் என்று அர்த்தம். காய்த்த மரத்தில் தானே கல் அடிபடும்.
சமீபகாலமாக தமிழக அரசு தமிழ்த் திரைத்துறையினரை அழைத்துப் பேசி வருகிறார்கள். அது நல்ல விஷயமாகப்படுகிறது. அவர்கள் இன்னும் திரையுலகிற்கு நிறைய செய்ய வேண்டும்” என்று பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்.