

வி.ராம்ஜி
‘கங்கை அமரன் செய்த தவறு என்ன தெரியுமா என்று நடிகரும் இயக்குநருமான கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி, கே.பாக்யராஜுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மேலும், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு கே.பாக்யராஜ் வீடியோ பேட்டி அளித்தார்.
அதில் அவர் தெரிவித்ததாவது:
பாடல்கள் மேல ஒரு ஈடுபாடு எப்பவுமே எனக்கு உண்டு. என் படங்களிலும் பாடல்கள் மீது கவனம் செலுத்துவேன். நான் உதவி இயக்குநராக இருந்த போது, இளையராஜா சாருடன் கங்கை அமரனும் வருவார். கிடார் வாசிப்பார். அதையெல்லாம் பார்த்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். அப்போதே, நாம் படம் பண்ணும்போது, கங்கை அமரனை இசையமைப்பாளராக பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என நினைத்தேன்.
தவிர, கங்கை அமரன் நன்றாகப் பாட்டு எழுதுவார். இசை ஞானமும் அவருக்கு உண்டு என்பதால், பாடல் வரிகளைக் கச்சிதமாகக் கையாளுவார். ‘16 வயதினிலே’ படத்தில், ‘செந்தூரப்பூவே’ பாட்டு அவர் எழுதியதுதான். இதுமாதிரி என் படங்களுக்குக் கூட நிறைய பாடல்கள் எழுதியிருக்கிறார். அவரால் இலக்கியத் தரம் வாய்ந்த, இலக்கணச் சுத்தமாகவும் கூட பாட்டு எழுத முடியும்.
’கிழக்கே போகும் ரயில்’ படத்தில், ‘பூவரசம்பூ பூத்தாச்சு’ பாடலை அவர்தான் எழுதியிருந்தார். அதில், ‘பொங்குற மனசு காவேரி போல பாடாதோ’ என்று எழுதியிருந்தார். உடனே நான் அவரிடம், ‘இந்த வரியை கொஞ்சம் மாத்திக்கலாமா’ என்று கேட்டேன். என்ன என்று கேட்டார். ‘பொங்குற மனசு காவேரி போல பாடாதோ’ என்பதற்குப் பதிலாக, ‘காவேரி போல பொங்குற மனசு பாடாதோ’ என்று வைத்துக்கொள்ளலாமா’ என்று கேட்டேன். ‘அட... இது நல்லாருக்கே. இப்படியே வைச்சுக்கலாம்’ என்று மாற்றினார் கங்கை அமரன். ஈகோவே இல்லாதவர் கங்கை அமரன். எதைச் சொன்னாலும் அதை ஏற்றுக் கொள்வார்.
அதேபோல், அந்தப் பாடலில், ‘மச்சான் வந்தா ஆக்கிக் கொடுப்பேன். மாருல சாய்ஞ்சு புதையல் எடுப்பேனே’ என்று சின்னதாக மாற்றம் சொன்னேன். ‘நல்லாருக்குங்க’ என்று ஏற்றுக்கொண்டார். இப்படி அவர் மனதில் ஈகோவே இல்லாமல் பழகினார்.
அதுமட்டுமில்லாமல், கங்கை அமரன் நன்றாக இசையமைப்பார். நன்றாக படத்தை இயக்கி வெற்றிப் படங்கள் கொடுத்தார். நல்ல நல்ல பாடல்கள் எழுதியிருக்கிறார். என்னைப் பொருத்தவரை, கங்கை அமரன் இப்படி பல விஷயங்களுக்குள் செல்லாமல், பாட்டு மட்டும் எழுதுவதில் கவனம் செலுத்தியிருந்தால், மிகப்பெரிய பாடலாசிரியராக தனித்துவமான பாடல்களையெல்லாம் இன்னும் நிறையவே கொடுத்திருப்பார் என்றுதான் நினைக்கிறேன்.
கங்கை அமரன் அந்த அளவுக்கு ஞானஸ்தன். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் ‘அந்தி வரும் நேரம்’ பாடலை மிக அற்புதமாக எழுதியிருப்பார். ‘எங்க சின்ன ராசா’ படத்தில், ‘எடுடா மேளம் அடிடா தாளம் இனிதான் கச்சேரி ஆரம்பம்’ என்ற பாடலையும் ‘உங்களுக்குப் பொருத்தமான பாடல்’ என்று எழுதிக் கொடுத்தார். அந்தப் பாடல்கள் எல்லாமே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.
இயக்குநர் கே.பாக்யராஜ் ‘இந்து தமிழ்திசை’க்கு அளித்த பிரத்யேக வீடியோ பேட்டியைக் காண :