’முந்தானை முடிச்சு’ படத்துக்கு வந்த பிரச்சினை; இசையமைக்க மறுத்தார் இளையராஜா! - இயக்குநர் கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி

’முந்தானை முடிச்சு’ படத்துக்கு வந்த பிரச்சினை; இசையமைக்க மறுத்தார் இளையராஜா! - இயக்குநர் கே.பாக்யராஜ் பிரத்யேகப் பேட்டி
Updated on
2 min read

வி.ராம்ஜி

முந்தானை முடிச்சு’ படத்துக்கு ஒரு பிரச்சினை வந்தது. இளையராஜா இசையமைக்க மறுத்துவிட்டார் என்று இயக்குநர் கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

நடிகரும் இயக்குநருமான பாக்யராஜ், இயக்கிய முதல் படம் ‘சுவரில்லாத சித்திரங்கள்’. இந்தப் படம் வெளியாகி 40 வருடங்களாகிவிட்டன. இதையொட்டி, கே.பாக்யராஜுக்கு ‘இந்து தமிழ் திசை’ சார்பில், அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

மேலும், ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்துக்கு கே.பாக்யராஜ் வீடியோ பேட்டி அளித்தார்.

அதில் அவர் தெரிவித்ததாவது:

முந்தானை முடிச்சு’ படத்துக்கு முன்னதாக நானும் கங்கை அமரனும் சந்தித்துக் கொண்டோம். அப்போது அவர், ‘என்னய்யா, நாம ரெண்டுபேரும் சேர்ந்து படம் பண்ணவே இல்ல. என்னைக் கூப்பிடவே இல்லியே’ என்று கேட்டார்.

உண்மைதான். என் முதல் படமான ‘சுவரில்லாத சித்திரங்கள்’ படத்துக்கு கங்கை அமரன் தான் இசையமைத்தார். பிறகு, ‘மெளன கீதங்கள்’ படத்துக்கும் அவர்தான் இசையமைத்துக் கொடுத்தார். அதன் பிறகு நானும் அவரும் சேர்ந்து படம் பண்ணவில்லை. அவர் கேட்டதும், ‘அவ்ளோதானே. அடுத்த படத்துல நாம சேர்ந்து பண்ணுறோம். நீங்கதான் மியூஸிக் பண்றீங்க’ என்று வாக்குறுதி கொடுத்தேன்.

அந்த சமயத்தில், ஏவிஎம் நிறுவனம் ‘நாம் சேர்ந்து படம் பண்ணுவோம்’ என்று அழைக்க, நான் கதையைச் சொன்னேன். ஓகே செய்யப்பட்டது. படத்துக்கு இசை கங்கை அமரன் என்று ஏவிஎம்மிடம் சொன்னேன். ஆனால் கதை சொல்லுவதற்கு முன்பு, கங்கை அமரன் என்று சொன்னதும் ஒத்துக்கொண்டார்கள். கதை அட்டகாசமான கிராமத்துக் கதையாக வந்திருக்கிறது. எனவே இளையராஜா இசை அமைக்கட்டும். அதுதான் நன்றாக இருக்கும் என்றார்கள்.

என் அடுத்த படத்துக்கு நீங்கதான் இசையமைக்கிறீங்க’ என்று கங்கை அமரனிடம் வாக்குக் கொடுத்துவிட்டேன். அதை மீற எனக்கு மனம் வரவில்லை என்பதில் உறுதியாக இருந்தேன். ஆனால் ஏவிஎம் நிறுவனத்தார், கங்கை அமரனிடம் பேசி சமாதானம் செய்தார்கள். ‘உங்களுக்கு அடுத்ததாக இரண்டு படம் கூட தருகிறோம். இதில் இளையராஜா இசையமைக்கட்டும். பாக்யராஜ் ஒத்துக்கொள்ள மாட்டேன். உங்களுக்கு வாக்கு கொடுத்துவிட்டேன் என்கிறார்கள் என்று பேசினார்கள்.

கங்கை அமரனும் என்னிடம், ‘இந்தப் படத்தை அண்ணனை வைத்தே பண்ணுங்கள். ஏவிஎம் நிறுவனத்தார் எனக்கு இரண்டு படங்கள் தருவதாகச் சொல்லியிருக்கிறார்கள்’ என்றார்.

பிறகு இளையராஜாவிடம் சென்றேன். ஆனால் இளையராஜா, ‘நான் இசையமைக்க மாட்டேன்’ என்று சொல்லிவிட்டார். ‘முதல்லயே ஏன் எங்கிட்ட வரலை. இந்தப் படத்துக்கு நான் தான் இசையமைக்கணும்னு ஏன் நினைக்கல’ என்று சொன்னார். ‘நான் அமருக்கு (கங்கை அமரன்) வாக்குக் கொடுத்திருந்தேன். அதன்படி அவரை வைத்து இசையமைக்க முடிவு செய்தேன். உங்க தம்பிதானே. கொஞ்சம் விட்டுக்கொடுக்கக் கூடாதா? இப்பதான் உங்ககிட்ட வந்துட்டேனே’ என்று இளையராஜாவை சமாதானப்படுத்தினேன். அவரும் ஒத்துக்கொண்டு மிகச்சிறந்த இசையை ‘முந்தானை முடிச்சு’ படத்தில் வழங்கினார். எல்லாப் பாடல்களையும் ஹிட்டாக்கிக் கொடுத்தார்.

இவ்வாறு கே.பாக்யராஜ் தெரிவித்தார்.

கே.பாக்யராஜின் வீடியோ பேட்டியைக் காண :

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in