

தங்கைக்காகவும், உறவுகளுக்காக வும் தன்மானத்தை விட்டுக்கொடுக் கத் தயங்காத தமையனின் கதை ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.
தந்தையை (சமுத்திரகனி) இழந்த இளைஞர் அரும்பொன், (சிவகார்த்தி கேயன்) உடன்பிறக்காத தங்கை துளசியுடன் (ஐஸ்வர்யா ராஜேஷ்) ‘பாசமலர்’ வாழ்க்கை வாழ்கிறார். பெரி யப்பா (வேல ராமமூர்த்தி), சித்தப்பா (சுப்பு பஞ்சு) இருந்தும், அவர்களது உதவி இல்லாமல் தன் தங்கையை நல்ல இடத்தில் திருமணம் செய்து வைக்க முயல்கிறார். தங்கைக்கு திருமணம் செய்துவைத்துவிட்டு, கலெக்டராக முயற்சிக்கும் மாமன் மகள் அனு இமானுவேலை திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார் சிவகார்த்திகேயன்.
ஐஸ்வர்யா திருமணம் தடைபடுகி றது. வேறு வழியின்றி, அண்ணனுக்குப் பிடிக்காத ஐயனாரை (நட்டி) திரு மணம் செய்துகொள்கிறார். மனை வியை வெறுக்காவிட்டாலும், மைத்து னனை தொடர்ந்து அவமானப்படுத் திக்கொண்டே இருக்கிறார் ஐயனார். அண்ணன் - தங்கையை நிரந்தர மாகப் பிரிக்க நினைக்கிறார். இதனால் ஏற்படும் பிரச்சினைகளும், அதில் இருந்து அண்ணன் - தங்கை பாசப் பிணைப்பு தப்பித்ததா என்பதே மீதிக்கதை.
குடும்ப உறவுகளை மையமாகக் கொண்ட ‘கடைக்குட்டி சிங்கம்’ படத் தின் வெற்றியைத் தொடர்ந்து மீண் டும் அதே பாணி திரைக்களத்தை தேர்ந் தெடுத்துள்ளார் இயக்குநர் பாண்டி ராஜ். ஒரு காட்சியில் பாரதிராஜா, ‘‘பாசமலர், கிழக்குச்சீமையிலே படம் பார்த்திருக்கீங்களா? இது லேட்டஸ்ட் வெர்ஷன்’’ என்பார். அண்ணன் - தங்கை பாசக் கதைகள் தமிழுக்குப் புதிதல்ல என்றாலும், உடன் பிறக்காத தங்கைக் காக அண்ணன் உருகி மருகும் ‘பாச மலர்’ கதை, அட போட வைக்கிறது.
யார் யாருக்கு இடையே என்ன உறவுமுறை என்று நினைவு வைத்துக் கொள்வதே பெரிய சவாலாக இருக்கிறது. புரியும்படியான கதா பாத்திர வார்ப்பில் இயக்குநர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும். பாசம் செலுத்தாத உறவினர்களையும் பாசத் துடன் அரவணைத்துச் செல்வதே சிறந்த பண்பு என்பதை இயக்குநர் வலியுறுத்துகிறார்.
அண்ணன் - தங்கை பாசம் என்றாலே கண்ணீரில்தான் வெளிப்படுத்த வேண் டும் என இல்லாமல், ஒருவரை ஒருவர் கலாய்த்துக்கொள்வதன் வழியாகவும் நிரப்ப முடியும் என்று காட்சிப்படுத்தி யது சிறப்பு. குடும்பக் கதைகளை வைத்து படம் எடுக்கும் போக்கு குறைந்து வரும் காலத்தில், உறவு களை மையப்படுத்தி படம் எடுத்திருக் கும் இயக்குநரைப் பாராட்டலாம்.
குடும்ப உறவுகளிடம் பாசத்தை எதிர்பார்க்கும் இளைஞன், அவனைச் சுற்றியுள்ள சொந்த பந்தங்களின் போட்டி, பொறாமை என உறவுச் சிக்கல்கள் மீதே முதல் பாதி நீள்கிறது. இரண்டாம் பாதியில் திரைக்கதை தொய்வடைகிறது.
சமுத்திரக்கனி, ஆர்.கே.சுரேஷ் இடம்பெறும் ஃபிளாஷ்பேக் காட்சிகள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. படத்தின் ஆதாரச் சிக்கலான மைத்து னன் - மாப்பிள்ளை பிணக்குக்கும், அது அப்படியே தொடர்வதற்கும் வலுவான காரணங்கள் இல்லை.
சமுத்திரக்கனி மின்சாரம் பாய்ந்து உயிரிழக்கும் காட்சி அபத்தம். படம் முழுக்க நீளும் சடங்கு, சம்பிரதாயம், குடும்ப விழா என இழுவையான காட்சி களை குறைத்திருந்தால் சுவாரஸ்யம் கூடியிருக்கும்.
அனு இமானுவேல் கதாபாத்திரத் தின் கலெக்டராகும் லட்சியமும் நகைச்சுவையாகவே சித்தரிக்கப்பட் டுள்ளது. படத்தில் கணவனை இழந்த பெண்களாக வரும் அனைவரும் மறு மணம் செய்துகொள்ளாமல் இருக்க முடிவெடுப்பதுபோல காண்பித்திருப் பது உறுத்தல்.
சிவகார்த்திகேயன் பொறுப்புள்ள இளைஞராக, குடும்பத்தில் அனைவ ரையும் நல்லிணக்கமாக வைத்திருக் கப் பாடுபடும் குடும்ப உறுப்பினராக, தனக்கே உரிய கிண்டல் பாணியில் பட்டையைக் கிளப்புகிறார். நீண்ட வசனங்கள் பேசும் காட்சிகளில் கொஞ்சம் மெனக்கெட்டிருக்கலாம்.
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பு சிறப்பு. அண்ணனிடம் அன்பை பொழி வது, பெரியவர்கள் அவமதிக்கும் போது பொறுத்துக் கொள்வது, கணவ னுக்கும் அண்ணனுக்கும் இடையே சிக்கித் தவிப்பது என உணர்வுகளை மிகையின்றி வெளிப்படுத்துகிறார்.
அவரது கதாபாத்திரமும், நாட்டு வைத்தியராக சிறப்பான பங்களிப்பை அளித்திருக்கும் பாரதிராஜாவும் படத் துக்கு பெரிய பலம்.
சூரியும், அவரது மகனாக வரும் இயக்குநர் பாண்டிராஜின் மகன் அன்பு வும் குறும்பு வசனங்களால் சிரிக்க வைக்கின்றனர். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் அனு இமானுவேல். அர்ச்சனா, வேல ராமமூர்த்தி, சுப்பு பஞ்சு வழக்கம்போல முதிர்ச்சியான நடிப்பை வழங்கியுள்ளனர்.
‘‘சொந்தக்காரன்கிட்ட தோக்கத் தயாரா இருக்கறவன யாராலயும் ஜெயிக்க முடியாது’’ என்பது போன்ற பாண்டிராஜின் வசனங்கள் நினைவில் நிற்கின்றன. டி.இமான் இசையில் ‘உன்கூடவே பொறக்கணும்’, ‘எங்க அண்ணன்’, ‘மயிலாஞ்சி’ போன்ற பாடல்கள் தாளம் போட வைக்கின்றன. பின்னணி இசையும், நிரவ் ஷா ஒளிப்பதிவும் பெரிதாக கவனம் ஈர்க்க வில்லை.
நல்லவர்கள், கெட்டவர்கள் என்ற பழங்காலத்து பாத்திர வார்ப்புகளால் மெகா தொடர் பார்க்கும் உணர்வைத் தந்தாலும் சென்டிமென்ட், காதல், நகைச்சுவை என அனைத்து வயது ரசிகர்களுக்கும் தேவையானவற்றை சரிவிகிதத்தில் கலந்து கொடுத்திருக் கிறான் ‘நம்ம வீட்டுப் பிள்ளை’.