

10 கோடி கொடுத்ததாக புகார் அளித்த விவகாரம் தொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஞானவேல்ராஜாவுக்கு கமல் தரப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
'உத்தம வில்லன்' பட வெளியீட்டின் போது பைனான்ஸ் பிரச்சினையில் சிக்கியது லிங்குசாமியின் தயாரிப்பு நிறுவனமான திருப்பதி பிரதர்ஸ்.
இந்தப் படத்தின் வெளியீட்டுப் பேச்சுவார்த்தையில் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்துக்குப் படம் பண்ணித் தருவது அல்லது அடுத்த பட வெளியீட்டின் போது கொடுத்துவிடுவது என ரூ.10 கோடியை ஸ்டுடியோ க்ரீன் நிறுவனத்திடம் கமல் வாங்கியதாக தெரிவித்துள்ளார் ஞானவேல்ராஜா. இப்போது வரை எந்தவொரு பதிலுமே கூறவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
இந்தப் புகார் தொடர்பாக தங்களுடைய கடும் கண்டனத்தை தெரிவித்து அறிக்கை விடுத்தது கமலின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனம். தற்போது ஞானவேல்ராஜா தரப்புக்கு ராஜ்கமல் நிறுவனம் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், "கடந்த 2 நாட்களாக நீங்கள் கமல்ஹாசனுக்கு ரூ.10,00,00,000 (ரூ. 10 கோடி) கொடுத்ததாக ஊடகங்களில் செய்திகள் வருவதை நாங்கள் பார்த்து வருகிறோம். இது அப்பட்டமான பொய், நாங்கள் இந்தச் செய்திகளை மறுக்கிறோம். மேலும், உங்களுக்கு கமல்ஹாசன் படம் செய்து கொடுப்பதாகவும் நீங்கள் கூறிவருவதாகத் தெரிகிறது. இதுவும் உண்மையல்ல.
இந்நிலையில் நீங்கள் கமல்ஹாசனுக்கு கொடுத்ததாகக் கூறும் ரூ. 10 கோடி தொடர்பான விவரங்களையும் அதே போல் கமல்ஹாசன் உங்களுக்கு படம் செய்து கொடுக்கிறேன் என்று நீங்கள் கூறுவதற்கான ஆதார விவரங்களையும் உடனடியாக அளிக்குமாறு வலியுறுத்துகிறோம். அல்லது இது தொடர்பாக நீங்கள் புகார் அளித்ததாக வந்த செய்திகளின் அடிப்படையில் நீங்கள் புகாரை வாபஸ் பெறவும், நீங்கள் விளக்கமளிக்கவும் கோருகிறோம்.
இவற்றை நீங்கள் செய்யத் தவறும்பட்சத்தில் உங்கள் மீது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சிவில் மற்றும் குற்ற நடவடிக்கை எடுக்கும் நிலைக்குத் தள்ளப்படும், என்பதை நீங்கள் கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்" என்று ராஜ்கமல் நிறுவனம் தெரிவித்துள்ளது.