

நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? என்று 'வாழ்க விவசாயி' இசை வெளியீட்டு விழாவில் நடிகர் அப்புக்குட்டி கேள்வி எழுப்பினார்
அப்புக்குட்டி, வசுந்தரா, ஸ்ரீகல்கி, முத்துராமன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'வாழ்க விவசாயி'. புதுமுக பொன்னி மோகன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தைக் கதிர் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. புதுமுக இசையமைப்பாளர் ஜெய்கிருஷ் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் படக்குழுவினர் அனைவருடன் சிறப்பு விருந்தினராக இயக்குநர் சுசீந்திரன் கலந்து கொண்டார். இந்த விழாவில் நடிகர் அப்புக்குட்டி பேசும் போது, "இனி நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிவிடுவேன். நம்பிக்கையிருக்கிறது. பயப்படாதீர்கள். ஏன் நான் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கக்கூடாதா? நான் திரைத்துறைக்கு வந்து பத்து ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த படத்தின் கதையை இயக்குநர் என்னிடம் சொல்லும் போது, என்னுடைய அம்மாவை நேரில் பார்த்தது போலிருந்தது. எங்களிடம் விவசாய நிலம் கிடையாது. என்னுடைய பெற்றோர்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள் தான். ஏன் சென்னைக்கு வந்தேன் என்றால் விவசாயம் செய்வதற்கு நிலமில்லை. நிலமிருந்தால் ஆடு மாடு மேய்த்துக் கொண்டிருப்பேன். எனக்கு ஒரு வேளை சோறு போடக்கூட அம்மாவால் முடியவில்லை.
பிறகு நாம் ஏன் இவ்வளவு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறோம் என்று எண்ணி, என்னுடைய தேவைகளுக்காகச் சென்னைக்கு வந்தேன். அதைவிட உண்மையான விஷயம் என்னவென்றால், விவசாயம் அழிந்துவிட்டது. விவசாயிகள் படும் கஷ்டத்தை இயக்குநர் விவரிக்கும் போது,இந்தப் படத்தின் கதையை விடக்கூடாது என்று எண்ணி உடனடியாக ஒப்புக்கொண்டேன்.
என் கூட நடிப்பதற்கு நடிகைகள் தயங்குகிறார்கள். ஏன் தயங்க வேண்டும்? நான் நடிகனில்லையா? என்னையும் நடிகராக ஏற்றுக்கொள்ளக்கூடாதா..? அந்த வகையில் என்னுடன் நடித்த நடிகை வசுந்தராவை மனதார பாராட்டுகிறேன். இனிமேல் என்னுடன் நடிப்பதற்கு நடிகைகள் முன் வருவார்கள் என்று நம்புகிறேன். ஒவ்வொரு காட்சியையும் சிறப்பாக இயக்கியிருக்கிறார்.
'அழகர்சாமியின் குதிரை' படம் எப்படி எனக்குப் பெயரும் புகழும் வாங்கிக் கொடுத்ததோ.. அதே போல் இந்த 'வாழ்க விவசாயி' படமும் எனக்குப் பெயரும் புகழும் வாங்கிக் கொடுக்கும் என்று நம்புகிறேன்" எனப் பேசினார் இயக்குநர் அப்புக்குட்டி