

'ஒத்த செருப்பு' பார்த்துவிட்டு பார்த்திபன் காலில் விழுந்ததாக, இயக்குநர்.எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
பார்த்திபன் இயக்கி, தயாரித்து, நடித்துள்ள படம் 'ஒத்த செருப்பு'. செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் முழுவதும் பார்த்திபன் என்கிற ஒற்றைக் கதாபாத்திரம் மட்டுமே இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தைப் பார்த்த பல்வேறு திரையுலக பிரபலங்களும் பாராட்டி வருகிறார்கள்.
இந்தப் படத்துக்குப் போதிய வரவேற்பு கிடைத்துள்ளதால், பத்திரிகையாளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் இணைந்து இயக்குநர்கள் எஸ்.ஏ.சி, ஜெயம் ராஜா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசும் போது, "ஒரே ஒரு கேரக்டர் என்ன பண்ணப் போகுது என்ற ஆர்வத்தில், திரையரங்கில் என் உதவியாளர்களும் சென்று பார்த்தேன். படம் முடிந்தவுடன் போனில் பாராட்ட வேண்டிய படம் அல்ல என்று நினைத்தேன். உடனே, அவருக்கு தொலைபேசியில் வீட்டின் முகவரி வாங்கி நேரில் சென்றேன். இதுவே அவருடைய வெற்றி.
இதுவரை நான் படம் பார்த்துவிட்டு, பாராட்டுவதற்கு வீட்டிற்குச் சென்ற 4-வது இயக்குநர் பார்த்திபன். 'சங்கராபரணம்' பார்த்துவிட்டு இயக்குநர் விஸ்வநாத், 'அரங்கேற்றம்' பார்த்துவிட்டு இயக்குநர் பாலசந்தர், 'புதிய வார்ப்புகள்' பார்த்துவிட்டு இயக்குநர் பாரதிராஜா ஆகியோரைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கு இயக்குநர் பார்த்திபன் வீட்டுக்குச் சென்றுள்ளேன்.
இதெல்லாம் சொல்லிப் பாராட்ட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே சென்றேன். ஆனால், அவரைப் பார்த்தவுடன் வார்த்தைகளே வரவில்லை. திரும்பத் திரும்ப ஏதோ உளறிக் கொண்டே இருக்கிறேன். அவரோ அதை ரசித்துக் கொண்டே இருக்கிறார். ஒரே ஒரு கதாபாத்திரம், ஒரு லொகேஷன் நம்மை ஒண்ணே முக்கால் மணி நேரம் ரசிக்க வைத்தது. கிண்டல் பண்றார், அழ வைக்கிறார், சமூகத்திலிருக்கும் வெறுப்பு என அனைத்தையுமே பண்ணியிருக்கார்.
ஒரு படமாவது உங்களிடம் உதவி இயக்குநராக வேலை செய்யணும் சார். எனக்கொரு சந்தர்ப்பம் கொடுங்க ப்ளீஸ். ஏதோ ஒன்று பண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆனால், உங்களிடம் கற்றுக் கொண்டு ஏதோ ஒன்று பண்ணுவேன். நீங்கள் இயக்கும் அடுத்த படத்தில் பணிபுரிகிறேன். எனக்குச் சம்பளமெல்லாம் வேண்டாம். இதைக் காமெடியாக சொல்லவில்லை.
படத்தின் ஒவ்வொரு காட்சியிலுமே எங்களை ரசிக்க வைத்தீர்கள். இன்றைய தலைமுறை பார்க்கும் விதமாக கொடுத்ததை சாதாரணமாகப் பாராட்ட முடியாது. 'புதிய பாதை' படத்திலிருந்தே புதிய பாதை போட்டு வந்துள்ளீர்கள். இன்னும் புதுசு புதுசாக சிந்திப்பீர்கள். இந்தப் படத்துக்காகத் தேசிய விருது காத்திருக்கிறது. இந்தப் படத்துக்குத் தேசிய விருது கொடுக்கவில்லை என்றால், மத்திய அரசுக்கே மதிப்பில்லாமல் போய்விடும்.
பார்த்திபனுக்கு முன்னால் நான் ஒன்றுமே இல்லை. நான் ஒரு கமர்ஷியல் இயக்குநர். பணம் சம்பாதிக்க வேண்டும் என வந்தேன். சம்பாதித்துவிட்டேன். உங்களுக்கு முன் நான் இயக்குநர் எனச் சொல்வதையே விரும்பவில்லை. 'ஒத்த செருப்பு' மாதிரி படமெடுக்க என்னால் முடியாது. எப்போதுமே மனதில் இருப்பதைச் சொல்லிவிடுவேன். அவர் அலுவலகத்துக்குச் சென்றவுடன் ஒன்று பண்ணினேன். என்னவென்றால், அவருடைய காலில் விழுந்துவிட்டேன். பார்த்திபன் சார் யூ ஆர் க்ரேட்!" என்று பேசினார் எஸ்.ஏ.சந்திரசேகர்