

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள 'பெட்ரோமாக்ஸ்' திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
'அதே கண்கள்' இயக்குநர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் உருவான புதிய படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. இதில் தமன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்கள்.
இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறது படக்குழு. ’பெட்ரோமாக்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. ஆனால் தீபாவளிக்கு 'பிகில்' மற்றும் 'கைதி' வெளியாவதால் போதுமான திரையரங்குகள் கிடைப்பதில் சந்தேகம் இருந்தது.
இதனால், இறுதிக்கட்டப் பணிகளைத் துரிதப்படுத்திய படக்குழு, படத்தைத் தணிக்கை செய்துவிட்டது. 'யு/ஏ' சான்றிதழ் கிடைத்ததைத் தொடர்ந்து, அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கில் டாப்ஸி, வெண்ணிலா கிஷோர் நடிப்பில் வரவேற்பைப் பெற்ற 'அனந்தோ பிரம்மா' படத்தின் ரீமேக் தான் 'பெட்ரோமாக்ஸ்' என்பது குறிப்பிடத்தக்கது. இது முழுக்க நாயகியை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும்.
சுந்தர்.சி நடித்துள்ள 'இருட்டு', சித்தார்த் நடித்துள்ள 'அருவம்' ஆகிய படங்களும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இந்த மூன்று படங்களுக்கும் உள்ள ஒற்றுமை என்னவென்றால் அனைத்துமே ஹாரர் படங்கள்.