

பொங்கலுக்கு ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள 'தர்பார்' படத்துடன், விஷால் படமும் வெளியாவது உறுதியாகியுள்ளது.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி, நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, சுனில் ஷெட்டி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'தர்பார்'. லைகா நிறுவனம் தயாரித்து வரும் இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. 2020-ம் ஆண்டு பொங்கல் வெளியீடு என்று படப்பிடிப்பு தொடங்கும்போதே படக்குழு அறிவித்துவிட்டது.
தற்போதுள்ள சூழலில் பொங்கல் வெளியீட்டில் 'தர்பார்' படக்குழு உறுதியாகவுள்ளது. விரைவில் டீஸரை வெளியிட்டு படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்கவுள்ளது. ரஜினி படம் என்பதால் தனியாக வரும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால், தான் நடித்து வரும் புதிய படமும் பொங்கல் வெளியீடு என விஷால் உறுதிப்படுத்தியுள்ளார்.
புதுமுக இயக்குநர் ஆனந்தன் இயக்கத்தில் விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ரெஜினா, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட பலர் நடிக்கும் படப்பிடிப்பு கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. தற்போதைக்கு 'இரும்புத்திரை 2' எனத் தலைப்பிட்டுள்ளனர். இந்தப் படத்தினை தனது தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார் விஷால்.
சென்னையில் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தையும் முடித்துப் பொங்கல் பண்டிகையின்போது படத்தை வெளியிடலாம் என்று விஷால் முடிவு செய்துள்ளார். இதனால் ரஜினி மற்றும் விஷால் ஆகியோரின் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இவ்விரண்டு படங்களைத் தொடர்ந்து, ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி, ஜோதிகா, சத்யராஜ் நடித்துள்ள படத்தின் பணிகள் முடிவடைந்துள்ளன. 'கைதி' படத்தின் தாமதத்தால் இந்தப் படத்தை அடுத்த ஆண்டு தொடக்கத்தில் வெளியிடலாம் என ஆலோசனை செய்து வருகிறார்கள். இதுவும் பொங்கல் வெளியீட்டில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.