

சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள 'அருவம்' திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.
சசி இயக்கத்தில் சித்தார்த், ஜி.வி.பிரகாஷ், லிஜோ மோல் ஜோஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'சிவப்பு மஞ்சள் பச்சை'. விமர்சன ரீதியாக இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, சித்தார்த் நடித்துள்ள அடுத்த படம் வெளியீட்டுக்குத் தயாராகிவிட்டது.
புதுமுக இயக்குநர் சாய் சேகர் இயக்கியுள்ள இந்தப் படத்தில் கத்ரீன் தெரசா, சதீஷ், கபீர் சிங் உள்ளிட்ட பலர் சித்தார்த்துடன் நடித்துள்ளனர். 'அருவம்' எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படம் ஹாரர் த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ளது.
சமீபத்தில் இதன் டீஸர் இணையத்தில் வெளியிடப்பட்டது. தற்போது இறுதிக்கட்டப் பணிகள் அனைத்தும் முடிவடைந்ததால், அக்டோபர் 11-ம் தேதி வெளியீடு எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
சுந்தர்.சி நாயகனாக நடித்துள்ள 'இருட்டு' படமும் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகவுள்ளது. இதுவும் ஹாரர் த்ரில்லர் பாணியிலேயே உருவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.