

ராதிகாதான் லேடி சூப்பர் ஸ்டார் என்று 'மார்க்கெட் ராஜா MBBS' இசை வெளியீட்டு விழாவில் சரத்குமார் புகழாரம் சூட்டினார்.
ஆரவ், ராதிகா, காவ்யா தாப்பர், நிகிஷா படேல் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மார்க்கெட் ராஜா MBBS'. சரண் இயக்கியுள்ள இந்தப் படத்துக்கு சைமன் கே.கிங் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று (செப்டம்பர் 24) நடைபெற்றது.
இதில் படக்குழுவினருடன் சரத்குமார், தயாரிப்பாளர் தனஞ்ஜெயன், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்ட பல்வேறு திரையுலகப் பிரபலங்களும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் நடிகை ராதிகாவுக்கு 'நடிகவேள் செல்வி' பட்டம் வழங்கி கவுரவித்துள்ளது படக்குழு.
இந்த விழாவில் சரத்குமார் பேசும் போது, "ராதிகா என்னை விடப் பெரிய நடிகர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை கொள்கிறேன். என்னை விட அவர் சீனியர். கலையுலக வயதை வைத்துச் சொல்கிறேன். ஏனென்றால் எனக்கு முன்பே கலையுலகிற்கு வந்துவிட்டார். இங்கு ராதிகாவைப் பெருமைப்படுத்தியதற்கு நன்றி.
அவருக்குக் கணவராகவோ, நண்பராகவோ சொல்லவில்லை. இன்னும் பல உயரங்களுக்கு அவர் சென்றிருக்க வேண்டும். அவர் சமயத்திலிருந்த நடிகைகளை விடச் சிறந்த நடிகை இவர். 41 ஆண்டுகளாகக் கலையுலகில் பயணித்துள்ளார். அது சாதாரண விஷயமல்ல. அவர்தான் லேடி சூப்பர் ஸ்டார்.
ஒரு நடிகையாக இந்தத் திரையுலகில் நிலைப்பது மிகவும் கடினம். எம்.ஆர்.ராதா செய்த சம்பவத்தால், அந்தக் குடும்பம் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கும். அதிலிருந்து மீண்டு நடித்தார். 5 ஆண்டுகள்தான் நாயகி எல்லாம் என்று நினைப்பார்கள். ஆனால், அவரோ சின்னத்திரையில் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கத் தொடங்கினார். பலருக்கும் வாய்ப்புகள் கொடுத்தார்.
எனக்கு இன்னும் அவருக்கான கவுரவங்கள் வரவே இல்லை என நினைக்கிறேன். அவருடைய திறமைக்கு பத்மஸ்ரீ, பத்ம பூஷண் கொடுத்திருக்கலாம். நிறைய ஜாம்பவான்கள் இங்கு வந்துள்ளீர்கள். அனைவரும் இணைந்து அவருக்கு பத்மஸ்ரீ விருது கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். 'பத்மஸ்ரீ' ராதிகா’ என்றால் ரொம்பப் பெருமைப்படுவேன்.
ரொம்பத் திறமையானவர். காலையிலிருந்து சாயங்காலம் வரை கலையுலகம், குழந்தைகள் மற்றும் என்னைப் பார்த்துக் கொள்கிறார். அவருக்கும் கோபம் வரும். ஆனால் அவரிடம் துப்பாக்கி இல்லை. என்னிடம் லைசென்ஸ் உடன் துப்பாக்கி இருக்கிறது. ராதிகாவிடம் பேஸ் பால் பேட் மட்டும் உள்ளது. நான் அழகாக இருக்கிறேன் என்றால், பேஸ் பால் பேட்டிற்கு இன்னும் வாய்ப்பே கொடுக்காமல் இருக்கிறேன்" என்று பேசினார் சரத்குமார்.