Published : 23 Sep 2019 09:34 PM
Last Updated : 23 Sep 2019 09:34 PM

வீடியோவை ஷேர் செய்தோருக்கும், இமான் சாருக்கும் நன்றி: திருமூர்த்தி உருக்கம்

தான் பாடிய வீடியோவை ஷேர் செய்தோருக்கும், இமான் சாருக்கும் நன்றி என்று திருமூர்த்தி உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியான படம் ’விஸ்வாசம்’. இமான் இசையமைத்த இந்தப் படத்தில் இடம்பெற்ற 'கண்ணான கண்ணே' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றது. யூ-டியூப் பக்கத்தில் இந்தப் பாடல் 83 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது.

'கண்ணான கண்ணே' பாடலை கண் தெரியாத ஒருவர் பாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது. அந்த வீடியோவைப் பார்த்த இசையமைப்பாளர் இமான் "இவரது தொடர்பு எண் கிடைக்குமா ஆன்லைன் மக்களே" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார்.

அவர் பதிவிட்ட சில மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட கண் தெரியாத நபரிடம் பேசி, அவருக்குப் பாடும் வாய்ப்பு வழங்கவும் சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை தன் ட்விட்டர் பதிவிலும் உறுதிப்படுத்தியுள்ளார். திருமூர்த்திக்கு உடனடியாக பாடும் வாய்ப்பு வழங்கியதற்கு, இமானுக்கு சமூக வலைதளத்தில் வாழ்த்துகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், திருமூர்த்திக்கு பாடும் வாய்ப்பு குவிந்துள்ளதைத் தொடர்ந்து அவரது சொந்த ஊரில் பலரும் அவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த தருணத்தில் 'இந்து தமிழ் திசை' நாளிதழுக்கு திருமூர்த்தி அளித்துள்ள வீடியோ பேட்டியில் கூறியிருப்பதாவது:

என் பெயர் திருமூர்த்தி. அப்பா பெயர் திருமால், அம்மா பெயர் சிவகாமி. தங்கச்சி பெயர் இசைமொழி, 7-ம் வகுப்பு படிக்கிறாள். அம்மா சமீபத்தில் தான் இறந்துவிட்டார். எனக்கு சிறுவயதிலிருந்து இசை மீது ஆர்வம் அதிகம். தப்பட்டை எல்லாம் தட்டிப் பாடுவேன்.

எனக்கு கீ-போர்டு எல்லாம் தம்பி தான் வாங்கிக் கொடுத்தான். பாடல்கள் எல்லாம் கேட்டு, அதை கீ-போர்டில் எப்படி வருகிறது என்பதை வாசித்துப் பார்ப்பேன். ஒத்தையடி மேளம், குடம் இப்படித் தான் வாசித்துக் கொண்டிருந்தேன். இப்போது கீ-போர்டு வாசிக்கிறேன். அடுத்ததாக ஏதேனும் வாசிப்புக் கருவி கிடைத்தாலும் கற்றுக் கொண்டு வாசிப்பேன்.

நானாகவே 8 பாடல்கள் உருவாக்கி வைத்துள்ளேன். அதில் 5 பாடல்கள் ஆல்பம் பண்ண முடிந்தது. 3 பாடல்கள் அப்படியே தான் உள்ளது. அதற்கு ஏதேனும் வசதி வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொடுத்தால் அதையும் ஆல்பமாக உருவாக்கிவிடுவேன்.

நான் பார்வையில்லாத மாற்றுத்திறனாளியாக இருந்தால் கூட, எனக்கு இப்படியொரு திறமையுள்ளது. பாடுவான், இசையமைக்கிறான் என்று கண்டுபிடித்த என் நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. ஊரில் சும்மா தான் பாடிக் கொண்டிருந்தேன். அதை எடுத்து ஃபேஸ்புக்கில் போட்டு, அதை ஷேர் செய்த அனைவருக்கும் நன்றி.

இசையமைப்பாளர் இமான் சார் வாய்ப்பு தருவதாகச் சொல்லியிருக்கார். அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படியொரு வாய்ப்பு எனக்குக் கிடைத்தது ரொம்ப பெரிய விஷயம். ஊரில் சும்மா குடத்திலும், தப்பட்டையிலும் தட்டிப் பாடிக் கொண்டிருந்தவனுக்கு இப்படியொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. கூடிய விரைவில் திருமூர்த்தியைப் பாடகராகப் பார்க்கலாம் என்று ட்விட்டர் பக்கத்தில் சொல்லியிருக்கார்

இவ்வாறு திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

திருமூர்த்தி அளித்துள்ள வீடியோ பேட்டி:

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x