

அசோக் செல்வன், ரித்திகா சிங் இணைந்து நடித்துள்ள படத்துக்கு ‘ஓ மை கடவுளே’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
அசோக் செல்வன் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘கூட்டத்தில் ஒருத்தன்’. ஞானவேல் இயக்கிய இந்தப் படத்தில், ப்ரியா ஆனந்த் ஹீரோயினாக நடித்தார். சமுத்திரக்கனி, நாசர், ஜான் விஜய், அனுபமா குமார், பகவதி பெருமாள், பால சரவணன், சஞ்சய் பாரதி என ஏராளமானோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தனர். 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் இந்தப் படம் ரிலீஸானது.
தற்போது சொந்தமாகத் தயாரிப்பு நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார் அசோக் செல்வன். அபிநயா செல்வத்துடன் இணைந்து அவர் தொடங்கியுள்ள ஹேப்பி ஹை பிக்சர்ஸ் நிறுவனம், ஆக்ஸஸ் ஃபிலிம் ஃபேக்டரியுடன் இணைந்து ‘ஓ மை கடவுளே’ என்ற படத்தைத் தயாரித்துள்ளது.
இந்தப் படத்தில் ஹீரோவாக அசோக் செல்வன் நடிக்க, ஹீரோயினாக ரித்திகா சிங் நடித்துள்ளார். ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய அஸ்வத் மாரிமுத்து இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். காதல் கலந்த நகைச்சுவைப் படமாக இது உருவாகியுள்ளது.
விது அய்யன்னா ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு, லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார்.