

நான் ஒரு திராவிடத் தெலுங்கன் என்று எம்.ஆர்.ராதா நினைவு நாள் நிகழ்ச்சியில் ராதாரவி பேசியுள்ளார்.
எப்போதுமே சர்ச்சையான பேச்சுகளுக்குப் பெயர் போனவர் நடிகர் ராதாரவி. சமீபத்தில் நயன்தாரா குறித்து இவர் பேசியது பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இதனைத் தொடர்ந்து திமுகவிலிருந்து நீக்கப்பட்டார். தற்போது அதிமுகவில் ஐக்கியமாகியுள்ளார்.
தமிழக தெலுங்கு மக்கள் கூட்டமைப்பு சார்பில் எம்.ஆர்.ராதாவின் 40-ம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதில் எம்.ஆர்.ராதாவின் மகன் ராதாரவி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு பேசியது பரபரப்பாகியுள்ளது.
அதில் ராதாரவி பேசும் போது, "தமிழக அமைச்சரவை அமைப்பதற்கு பெரும் தூணாக இருப்பது தெலுங்கு இனம் தான். தெலுங்கர் இனம் இல்லையென்றால் அமைச்சரவையை அமைக்க முடியாது. தேனி, திண்டுக்கல், விருதுநகர், சிவகாசி போன்ற தொகுதிகளில் தெலுங்கு பேசுபவர்கள் தான் தேர்தலில் நிற்கிறார்கள்.
தந்தை பெரியார் இல்லையென்றால் திராவிடம் என்று யாரும் பேச முடியாது. பெரியாரைத் தாக்கிப் பேசுவதற்கு இன்று நிறையப் பேர் இருக்கிறார்கள். நம்முடைய இனத்துக்கு யார் ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அவர்கள் தான் தமிழ்நாட்டில் வெற்றி பெற முடியும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன. கிருஷ்ண தேவராயர் இல்லையென்றால் மதுரை என்ற ஊரே வளர்ந்திருக்காது.
நாங்கள் யார் வம்புக்கும் வரமாட்டோம். திராவிடம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் வேறு இனம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள். இந்த தமிழ்நாடு தெலுங்கர்கள் இல்லையென்றால் எப்படி வளரும்? சினிமாவில் கூட அதிகமாக இருப்பவர்கள் தெலுங்கர்கள் தானே. என்னுடைய இனம் தெலுங்கு இனம். நான் தெலுங்குக்காரன் தான். மும்பையிலிருந்து கன்னியாகுமாரி வரை திராவிடம் தான். அதில் நான் திராவிடத் தெலுங்கன். இல்லையென்று சொல்ல முடியுமா?
தமிழ்நாட்டில் அற்புதமான முதல்வர் இருக்கிறார். நாம் அனைவரும் இணைந்து ஒற்றுமையாகச் சென்று சந்தித்து, நமக்கொரு அடையாளம் தேவை என்று கேட்க வேண்டும். நிச்சயமாகக் கொடுப்பார். பிரதமர் மோடியாக இருந்தாலும் நமக்கொரு அங்கீகாரம் கொடுக்கக் கூடியவர்கள். தெலங்கானா, ஆந்திரா என்ற இரண்டு மாநில முதல்வர்களும் பிரதமர் மோடிக்கும் துணை நிற்கிறார்கள். அப்படியிருக்கும் போது நமக்கு ஒரு ஆதரவு இருக்கும்.
பாண்டிச்சேரி மாதிரி இருக்கக் கூடாது. ஏனென்றால் அங்கு ஒவ்வொரு தெருவுக்கு ஒரு எம்.எல்.ஏ. தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் நமது குரல் ஒலிக்க வேண்டும். இங்குள்ள இளைஞர்கள் அனைவரும் நாம் தெலுங்கர் என்ற பெருமையோடு இருங்கள். நம்முடைய மொழியை நாம் மறக்கக் கூடாது.
சினிமாவில் அதிகமாக தெலுங்குக்காரர்கள் இருக்கிறார்கள். நான் தெலுங்கு என்று சொல்லிக் கொள்ளப் பலர் தயங்குகிறார்கள். நான் 28 ஆண்டுகள் திமுகவில், 18 ஆண்டுகள் அதிமுகவிலிருந்து அவர்களுக்காகக் கத்திப் பேசினேன். இனி நம் இனத்துக்காகக் கத்துவதற்குத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்கள் சொன்னால் நான் பேசத் தயார்” என்று பேசினார் ராதாரவி.