

கதையின் நாயகனாக நடிப்பது கனவு போல இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார் சூரி.
தனுஷ் நடிப்பில் ரிலீஸுக்குத் தயாராகிவரும் படம் ‘அசுரன். வெற்றிமாறன் இயக்கியுள்ள இந்தப் படம், பூமணி எழுதிய ‘வெக்கை’ நாவலை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. தனுஷ் ஜோடியாக மஞ்சு வாரியர் நடிக்க, இயக்குநர் பாலாஜி சக்திவேல், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வி கிரியேஷன்ஸ் சார்பில் கலைப்புலி எஸ்.தாணு இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனுஷ் படத்துக்கு இசையமைத்துள்ளார் ஜி.வி.பிரகாஷ். அடுத்த மாதம் (அக்டோபர்) 4-ம் தேதி படம் ரிலீஸாகிறது.
இந்தப் படத்தைத் தொடர்ந்து, நகைச்சுவை நடிகர் சூரியை ஹீரோவாக வைத்து ஒரு படத்தை இயக்கப் போகிறார் வெற்றிமாறன். இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகிவிட்டது. எல்ரெட் குமார் தயாரிக்கும் இந்தப் படம், குடும்பப் பாங்கான நகைச்சுவைப் படமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹீரோவாக நடிப்பது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் சூரி. “என்னைக் கதையின் நாயகனாக நடிக்கச் சொல்லி, கடந்த 4 வருடங்களாகவே நிறைய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் கேட்டு வருகின்றனர். ஆனால், அதில் எனக்கு உடன்பாடில்லை.
இப்போது வாழ்க்கை நன்றாக போய்க் கொண்டிருக்கிறது, அது அப்படியே போகட்டுமே என்று நினைத்தேன். எனக்கு நெருக்கமானவர்கள், ‘நீங்க இப்படியே இருங்க’ என்றார்கள். எனக்கும் அதுதான் சரியெனத் தோன்றியது. காமெடியிலயே இன்னும் நிறைய பண்ண வேண்டியது இருக்கிறது. அதனால், ‘கதையின் நாயகனாக நடிக்க மாட்டேன்’ என அவர்களிடம் சொல்லிவிட்டேன்.
ஆனால், தற்போது எதிர்பார்க்க முடியாத ஒரு வாய்ப்பு வந்துள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறேன். அது கனவு போலத்தான் எனக்கு இருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார் சூரி.
பாண்டிராஜ் இயக்கத்தில் சிவகார்த்திகேயனுடன் சூரி நடித்துள்ள ‘நம்ம வீட்டுப் பிள்ளை’ படம், வருகிற 27-ம் தேதி ரிலீஸாகிறது.