அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது மிக மிக அவசரம்

அக்டோபர் 11-ம் தேதி வெளியாகிறது மிக மிக அவசரம்
Updated on
1 min read

சுரேஷ் காமாட்சி தயாரித்து, இயக்கியுள்ள 'மிக மிக அவசரம்' திரைப்படம் அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இயக்குநராக அறிமுகமாகும் படம் 'மிக மிக அவசரம்'. ஸ்ரீப்ரியங்கா, ஹரிஷ், முத்துராமன், ராமதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்துவிட்டன.

ஆனால், சரியான வெளியீட்டுக்காகக் காத்திருந்தது படக்குழு. தற்போது இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லிப்ரா நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இந்நிலையில், அக்டோபர் 11-ம் தேதி வெளியாகும் எனப் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

முன்னதாக, இந்தப் படத்தை பல்வேறு பிரபலங்களுக்குத் திரையிட்டுக் காட்டியுள்ளார் சுரேஷ் காமாட்சி. அனைவருமே படக்குழுவினருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர். இதில் ஸ்ரீபிரியங்கா பெண் காவலர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். காவலர்களுக்கும் மனிதாபிமானம், மண் மீதான பற்று, மக்கள் போராட்டம் ஆகியவற்றில் அக்கறை உண்டு என்பதைப் படத்தில் வரும் காட்சிகளும் வசனங்களும் உணர்த்தும் என்று படக்குழு தெரிவித்துள்ளது.

அதிலும் பெண் காவலர்கள் படும் கஷ்டத்தை இந்தப் படத்தின் மூலம் காட்டவுள்ளனர். காவல்துறை உயர் அதிகாரிகளே இந்தப் படத்தை பெண் காவலர்களுக்குத் திரையிட்டுக் காட்டச் செய்தார்கள். அந்த விதமாக காவல்துறையில் பணியாற்றும் சகோதரிகளுக்கும் இந்தப் படத்தை சமர்ப்பணம் செய்ய உள்ளார் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.

'புதிய கீதை’, 'கோடம்பாக்கம்’, 'ராமன் தேடிய சீதை’ ஆகிய படங்களின் இயக்குநர் ஜெகன்நாத் இந்தப் படத்தின் கதை - வசனத்தை எழுதியுள்ளார். இஷான் தேவ் இசையமைத்துள்ள இந்தப் படத்திற்கு பாலபரணி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து 'ப்ளூ சட்டை' மாறன் இயக்கி வரும் படத்தையும், வெங்கட் பிரபு இயக்கவுள்ள 'மாநாடு' படத்தைத் தயாரித்து வருகிறார் சுரேஷ் காமாட்சி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in