ஷோபா எனும் நிஜ தேவதை!  - இன்று ஷோபா பிறந்தநாள்

ஷோபா எனும் நிஜ தேவதை!  - இன்று ஷோபா பிறந்தநாள்
Updated on
2 min read

வி.ராம்ஜி


எத்தனையோ நடிகைகள், நம் தமிழ் சினிமாவில் இருந்திருக்கிறார்கள். அவர்களில் எத்தனையோ பேரை மறந்தேவிட்டார்கள் ரசிகர்கள். அடுத்தடுத்த தலைமுறை வரும் போது, ‘யாரது? அப்படியொரு நடிகை இருந்தாங்களா?’ என்று கேட்டதும் நடந்துகொண்டேதான் இருக்கிறது. ஆனால் பலரை, இன்னும் மறக்காமல் இருக்கிறது தமிழ் உலகம்.


இத்தனைக்கும் பூசின உடம்பு இல்லை. கவர்ச்சிக் காட்டியெல்லாம் நடிக்கவில்லை. வத்தலும்தொத்தல் உடம்புதான். நடித்த படங்கள் கூட 25ஐத் தாண்டவில்லை. தலைமுறைகளும் கடந்துவிட்டன. ஆனாலும் அவரை மறக்கவில்லை ரசிகர்கள். மறக்கவே முடியாத நடிகை அவர். அதற்குக் காரணம்... அந்த முகம். நம் தெருவில் உள்ள பெண்ணைப் போன்றதொரு முகம். அந்தச் சிரிப்பு. எந்தக் கல்மிஷமோ விகல்பமோ பொய்யோ இல்லாத வெள்ளந்தியானச் சிரிப்பு. நம் வீட்டுப் பெண்ணைப் போன்றதொரு சிரிப்பு. குழந்தைத்தனமான சிரிப்பு. அந்தக் குழந்தைமைதான் குழந்தைமையும் கொஞ்சம் மேதைமைத்தனமும்தான் நம்மை ஈர்த்துப் போட்டது. இன்னமும் அவரை... இந்த நிமிடம் கூட, தமிழ் சினிமாவின் ரசிகர்கள் யாரேனும் எங்கேனும் இருந்துகொண்டு, அவர் பெயரைச் சொல்லிக்கொண்டிருப்பார்கள். அந்தப் பெயர்... ஷோபா.


கேரளத்தை கடவுளின் தேசம் என்பார்கள். குழந்தைமையுடன் இருக்கிற ஷோபாவின் ஊர், அங்கேதான். ஒருவகையில், ஷோபா கூட கடவுளின் குழந்தைதானோ என்னவோ. குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். ‘குழந்தை மகாலக்ஷ்மி மாதிரி இருக்காளே’ என்றார்கள். ஆமாம்... ஷோபாவின் இயற்பெயர் மகாலக்ஷ்மிதான்.


தமிழிலும் குழந்தை நட்சத்திரமாகத்தான் அறிமுகமானார். பிறகு ஓர் இடைவெளிக்குப் பிறகு, இயக்குநர் கே.பாலசந்தரின் படத்தில் குமரியாக அறிமுகமானார். அந்தப் படம்... ‘நிழல் நிஜமாகிறது’. ஆனால், இவரின் வாழ்வில் எதுவும் நிஜமாகாமல் நிழலாகவே போய்விட்டதுதான் பெருஞ்சோகம்.


‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் சுமித்ராதான் நாயகி. கமல்தான் நாயகன். சரத்பாபுவும் நடித்திருப்பார். ஹனுமந்துவுக்கும் கனமான கேரக்டர். ஆனாலும் அவர்களையெல்லாம் தாண்டி, நம் மனதுக்குள் வந்து உட்கார்ந்துகொள்வார் ஷோபா. அந்த யதார்த்தமான நடிப்பும் கள்ளமில்லாச் சிரிப்பும் எல்லோரையும் ஈர்த்தது.


பாலுமகேந்திராவின் ‘அழியாதகோலங்கள்’ படத்தில் டீச்சர் வேடம். நடிப்பில் பிரமாதப்படுத்தியிருந்தாலும், காட்டன் புடவை கட்டிய குழந்தையாகத்தான் ரசிகர்கள் பாசம் காட்டினார்கள்.


‘மூடுபனி’ படத்தில் மாடர்ன் டிரஸ்ஸில்தான் வருவார். ‘அந்த முட்டைக்கண்ணை வைத்துக்கொண்டு இந்த பிரதாப்பு, முழுங்கிடற மாதிரி பாக்கறாம்பா.நம்ம ஷோபாவை எதுனா செஞ்சிருவானோன்னு பயமா இருக்கு’ என்று ரசிகர்கள் சொல்லும் அளவுக்கு, சொல்லிப் புலம்பும் அளவுக்கு சிம்மாசனமிட்டு அமர்ந்த ஷோபா, தேவதையாகத்தான் வலம் வந்தார்.


மளமளவென படங்கள். கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் படங்களில் நடித்தார் ஷோபா. இயக்குநர் துரையின் ‘பசி’ படத்தில் நடித்த போது, அழுக்கு உடையும் குப்பைச் சாக்குமாக வலம் வந்த ஷோபாவை, இன்னும் கொண்டாடினார்கள். அரசாங்கமும் வியந்து பாராட்டியது. ‘ஊர்வசி’ என்கிற பட்டத்தை வழங்கி கெளரவித்தது.


இளம் வயதுதான். எல்லாமே அவசரம் அவசரமாக வந்தது. மரணம் உட்பட! ஷோபா எனும் கனவுலகின் நிஜ தேவதைக்கு இறக்கும் போது பதினெட்டு வயதுதான். தமிழில் 17 படங்கள் வரை நடித்துவிட்டார்.


1962ம் ஆண்டு பிறந்த ஷோபா, 78ம் ஆண்டு ‘நிழல் நிஜமாகிறது’ படத்தில் அறிமுகமான ஷோபா, 1980ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி இறந்தார். பதினெட்டு வயது கூட பூர்த்தியாகாத நிலையில் இறந்த ஷோபாவுக்கு, இன்று செப்டம்பர் 23ம் தேதி பிறந்தநாள்.


தேவதைகள் எப்போதாவதுதான் பிறப்பார்கள். தமிழ் சினிமாவில், அப்படியொரு தேவதை இன்னும் பிறக்கவில்லை. அந்த முகம்... வெள்ளந்தியான சிரிப்பு... காட்டன் புடவைக்குள் குழந்தைமையுடன் உலா வந்த நம் வீட்டுப் பெண்ணைப் போன்ற ஷோபா எனும் நிழல் நாயகி... நிஜம்.


பிறந்தநாளில்... ஷோபாவைப் போற்றுவோம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in