

பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் சிபிராஜ் நடிக்கவுள்ள படத்தின் நாயகியாக நந்திதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
’ரங்கா’, 'மாயோன்', 'வால்டர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிபிராஜ். இந்தப் படங்களைத் தொடர்ந்து பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய படத்துக்கு தேதிகள் ஒதுக்கியுள்ளார். இதன் முதற்கட்டப் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.
முன்பாகவே, இந்தக் கூட்டணி இணைந்து 'சத்யா' என்ற படத்தைக் கொடுத்துள்ளது. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இதனால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பது எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது.
பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கவுள்ள இந்தப் படம் சஸ்பென்ஸ், த்ரில்லர் கதையாகும். இதில் சிபிராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடிக்கவுள்ளனர். தனஞ்ஜெயன் தயாரிக்கவுள்ள இந்தப் படத்தின் நாயகியாக நந்திதா ஒப்பந்தமாகியுள்ளார்.
இக்கதைக்குத் துடிப்பான, நல்ல தமிழ் பேசக்கூடிய நடிகை அவசியம் என்பதால் நந்திதாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பைத் தொடங்க படக்குழு ஆயத்தமாகி வருகிறது.