

வி.ராம்ஜி
79ம் ஆண்டு கமலும் ரஜினியும் எம்ஜிஆர் - சிவாஜிக்கு அடுத்து என்று பேசப்பட்டதன் ஆரம்பகாலம். மளமளவென கமலுக்கும் ரஜினிக்கும் படங்கள் வந்துகொண்டே இருந்தன. ஆனாலும் இந்த வருடத்தில், கமல், ரஜினி படங்கள் கடந்தும் பல படங்கள் அந்த வருடம் வெற்றி பெற்றன.
79ம் வருடத்தில், ‘நீயா’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘உதிரிப்பூக்கள்’ ஆகிய படங்கள் மூன்றும் மூன்று விதமான கதைக்களம் கொண்டவை. ஆனாலும் மூன்று படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
‘நீயா’ இந்தி ‘நாகின்’ படத்தின் ரீமேக். இந்தப் படத்தை ஸ்ரீப்ரியா தயாரித்து நடித்தார். கமல், ரவிச்சந்திரன், விஜயகுமார், ஸ்ரீகாந்த், ஜெய்கணேஷ் என நடித்திருந்தாலும் இது கமல் படம் என்று சொல்லவில்லை ரசிகர்கள். பொதுவான படமாகத்தான் பார்த்தார்கள். சங்கர்கணேஷ் இசையில் எல்லாப் பாடல்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றன.
‘முள்ளும் மலரும்’ தந்த மகேந்திரனின் ‘உதிரிப்பூக்கள்’ தந்த தாக்கத்தில் இருந்து இன்னமும் தமிழ் சினிமாவும் ரசிகர்களும் விடுபடவே இல்லை. மெல்லிய உணர்வுகளையும் கனத்த சோகத்தையும் தாங்கி வந்த ‘உதிரிப்பூக்கள்’ படமும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. விஜயன், சரத்பாபு, அஸ்வினி ஆகியோர் நடித்திருந்தார்கள். பெரிய நடிகர்கள் எவருமில்லை. ஆனாலும் பிரமாண்ட வெற்றியைச் சந்தித்தது ‘உதிரிப்பூக்கள்’. இந்தப் படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் வெகுவாகப் பேசப்பட்டன. இந்தப் படத்தின் ‘அழகிய கண்ணே’ இன்றைக்கும் கூட பலரின் செல்போன்களுக்கு காலர் டியூன்களாக ஒலித்துக்கொண்டிருக்கின்றன.
இதேபோல், சுதாகர், சரிதா, விஜயன் நடித்த ‘பொண்ணு ஊருக்கு புதுசு’ மிகப்பெரிய வெற்றி பெற்ற படமாக அமைந்தது. பிரபல கதாசிரியர் ஆர்.செல்வராஜ், இந்தப் படத்தை இயக்கியிருந்தார். படத்துக்கு இளையராஜாவின் இசை மிகப்பெரிய பலமாக அமைந்தது.
அந்தக் காலத்தில், சிலோன் ரேடியோவில் இந்தப் படத்தின் பாடல்களை திரும்பத்திரும்ப ஒலிபரப்பியதெல்லாம் பெருஞ்சாதனை. முக்கியமாக, ‘ஓரம்போ ஓரம்போ ருக்குமணி வண்டி வருது’ பாடல் பட்டிதொட்டியெங்கும் ஹிட்டாகி, படத்தைக் கொண்டு போய்ச் சேர்த்தது. ‘சோலைக்குயிலே’ பாடலும் ‘சாமக்கோழி ஹேய் கூவுதம்மா’ முதலான பாடல்களும் ஹிட்டாகின. இந்தப் படத்தில் தான் பாடகியாக அறிமுகமானார் எஸ்.பி.ஷைலஜா.
இந்தப் படத்தின் விமர்சனத்தில், ‘இவ்வளவு நன்றாக இசையமைத்த இளையராஜாவே எல்லாப் பாடல்களையும் பாடியதுதான் படத்துக்கு மைனஸ்’ என்று சில பத்திரிகைகள் எழுதின. ஆனால் இவை எதை மைனஸ் என்று சொன்னதோ, அதுவே பிளஸ்ஸானது. இளையராஜா பாடிய எல்லாப் பாடல்களுமே மக்களைக் கவர்ந்தன.
‘நீயா’, ‘பொண்ணு ஊருக்கு புதுசு’, ‘உதிரிப்பூக்கள்’ மூன்று படங்களும் மூன்று திசைகளாக, வெவ்வேறு கோணங்கள் கொண்டவை. ஆனாலும் அந்த வருடத்தில் இந்த மூன்று படங்கள், நூறு நாள், 150 நாள், 200 நாள் படங்களாக ஓடின.
இந்த இரண்டு படங்களில், ‘நீயா’ படத்துக்கு சங்கர்கணேஷ் இசையமைத்தனர். மற்ற இரண்டு படங்களுக்கும் இளையராஜாதான் இசை!