'காப்பான்' படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்: விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டம்

'காப்பான்' படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள்: விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டம்
Updated on
1 min read

’காப்பான்’ படத்துக்கான எதிர்மறை விமர்சனங்கள் தொடர்பாக விமர்சகர்கள் குறித்து காட்டமாகப் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, மோகன்லால், ஆர்யா, சயிஷா சைகல், சமுத்திரக்கனி, சிராஜ் ஜானி, பொமன் இரானி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் 'காப்பான்'. எம்.எஸ்.பிரபு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளது.

செப்டம்பர் 20-ம் தேதி வெளியான இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது. ஆனால், வசூல் ரீதியாக முதல் நாளில் 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. பெரிய முதலீடு என்பதால் வரும் நாட்களில் வசூல் எப்படியிருக்கும் என்பதைப் பொறுத்தே இந்தப் படம் வெற்றியா, தோல்வியா என்பதை உறுதி செய்ய முடியும்.

இந்நிலையில் 'காப்பான்' படம் பார்த்துவிட்டு, அதன் விமர்சனங்கள் தொடர்பாக தன் எதிர்ப்பையும், படம் தொடர்பான தன் பார்வையையும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கடிதமாக வெளியிட்டுள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன்.

அதில் அவர் கூறியிருப்பதாவது:

''இன்று ரசிகர்கள் ஒரு படத்தை ரசிப்பதை விட்டுவிட்டு அதைத் தோண்டுவதில் அதிக கவனம் செலுத்துகிறார்கள். முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் முயற்சிகளைப் பாராட்டாமல் சில் விமர்சகர்கள் தங்களுடைய புத்திசாலித்தனத்தைக் காட்டவே நினைக்கின்றனர். ஒரு படம் பல தரப்பட்ட ரசிகர்களையும் திருப்திப்படுத்தவேண்டும்.

இந்தக் காலத்தில் சாதாரணப் பொதுமக்கள் கூட விமர்சகர்களாகி விடுகிறார்கள். படங்களைத் தோண்டித் துருவாமல் அவற்றை ரசிக்கத் தொடங்குவோம். தோல்விகளை மன்னிப்போம். இவ்வுலகில் எதுவுமே சரியானது இல்லை. அப்படியிருக்க ஏன் ஒரு திரைப்படம் மட்டும் சரியில்லாததாக இருக்கக்கூடாது?

சுவாரஸ்யமான திரைக்கதைக்காகவும், பல திருப்பங்களுக்காகவும், நடிகர்களில் நல்ல நடிப்புக்காகவும் இன்னும் பல விஷயங்களுக்காகவும் நான் காப்பானை மிகவும் ரசித்துப் பார்த்தேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள அனைத்து விவகாரங்களையும் கொண்டிருக்கும் பிரதமருடைய அலுவலகத்தைப் பற்றிக் காட்ட வேண்டும் என்பதே கே.வி.ஆனந்தின் நோக்கம்.

ஒரு பிரதமருடைய பணி என்ன என்பதை ஒரு சதவீதமாவது காட்டவேண்டும். பிரதமர் கதாபாத்திரத்தை மோகன்லால் அற்புதமாகச் செய்திருந்தார். சூர்யா ஒவ்வொரு ஃபிரேமிலும் கச்சிதமாக இருக்கிறார். இதற்கு எப்படிப்பட்ட உழைப்பும் அர்ப்பணிப்பும் தேவைப்பட்டிருக்கும்? வாழ்த்துகள் சார். ஆர்யாவும் மற்ற நடிகர்களும் கூலாக நடித்துள்ளனர். பார்க்கச் சீராகவும் நம்பிக்கையாகவும் இருக்கிறது.

'காப்பான்' அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் நல்ல படம். உங்கள் குடும்பத்தோடு சென்று பாருங்கள். படத்தில் இருக்கும் தேசபக்தி தருணங்களை ரசியுங்கள். லைகா தயாரிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படத்தின் திருப்பங்களை ரசியுங்கள்''.

இவ்வாறு இயக்குநர் விக்னேஷ் சிவன் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in