திரை விமர்சனம் - காப்பான்

திரை விமர்சனம் - காப்பான்
Updated on
2 min read

அடிப்படையில் விவசாயியாக இருக்கிறார் ராணுவ உளவு அதிகாரியான கதிர் (சூர்யா). நாட்டின் பிரதமரான சந்திரகாந்த் வர்மா வின் (மோகன்லால்) உயிருக்குக் குறிவைக்கிறது வில்லன் கூட்டம். கதிரின் துணிவு, புத்திசாலித்தனம் கண்டு, அவரை பிரதமருக்கான சிறப்பு பாது காப்பு அதிகாரியாக நியமிக்கிறார்கள். அப்பணியில் பிரதமரை மட்டுமல்ல; காவிரிப்படுகை விவசாயத்தையும் காக்கவேண்டிய சவால் கதிருக்கு வந்துசேருகிறது. பிரதமரையும், தஞ்சை விவசாயத்தையும் கதிர் காப்பாற்றினாரா, இல்லையா என்பது கதை.

‘அயன்’, ‘மாற்றான்’ பட வரிசையில் 3-வது முறையாக இணைந்திருக்கிறது கே.வி.ஆனந்த் - சூர்யா கூட்டணி. பெரும் பாலும் சமூகத்தைப் பிரதிபலிக்கும் ஒருவரிக் கதையை எடுத்துக்கொண்டு கமர்ஷியல் அம்சங்களோடு விறுவிறுப் பான திரில்லர் படம் தருவது கே.வி.ஆனந்த் பாணி. இதில், கார்ப்பரேட் முதலாளிகள் நினைத்தால், நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவியைக்கூடத் தங்கள் ஆக்டோபஸ் கரங்களால் ஆட்டம் காணச் செய்யமுடியும் என்ற, பலரும் தொடத் தயங்கும் கதைக் களத்தை எடுத்துக் கொண்டிருக்கிறார்.

அதற்குள் மோகன்லால், சூர்யா, ஆர்யா ஆகிய மூன்று முன்னணிக் கதாநாயகர்களைப் பொருத்திக் காட்டிய விதத்துக்காக இயக்குநரைப் பாராட்ட லாம். ஆனால், அதுவே படத்துக்கு அஜீரணத்தையும் கொண்டு வந்து விட்டது. ஒவ்வொரு முன்னணி நடிகருக்கும் தரவேண்டிய முக்கியத் துவம் கருதி, ஒருவரிக் கதை, பல வரி களாக ஆக்கப்பட்டதில் ‘ஓவர்லோடு’ செய்யப்பட்ட திரைக்கதை பார்வை யாளர்களை மூச்சுமுட்ட வைக்கிறது.

படத்தில் அபாரமான, ஈர்க்கக்கூடிய அம்சங்கள் தொழில்நுட்பமும் படமாக்க மும் (ஒளிப்பதிவு: எம்.எஸ்.பிரபு, அபிநந்தன்). பிரதமரைப் பாதுகாக்கும் சிறப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு பணிபுரியும் விதம் திரைக்கான சித்தரிப்பு என்றபோதும், வாய் பிளக்க வைக்கும் படமாக்கம், லாஜிக் பற்றிய கேள்விகளை மறக்கடித்துவிடுகிறது.

அதேபோல, சூர்யாவின் இயற்கை விவசாயப் பண்ணையும், அதில் இறங்கி அவர் வேலை செய்யும் காட்சிகளும் ஈர்க்கின்றன. இவற்றுக்கெல்லாம் உச்ச மாக சிலிபெரா பூச்சிகளை நம்பும் படியாகச் சித்தரித்துக் காட்டியதில் படக்குழுவின் உழைப்பு ‘அட!’ போட வைக்கிறது.

‘காப்பான்’ என்ற தலைப்பை நியாயப் படுத்தும் கதிர் கதாபாத்திரத்தில் ரகசிய உளவாளி, இயற்கை விவசாயி, பிரதம ரின் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி, காதலன், நண்பன் என பல பரிமாணங் களில் சூர்யா ‘பேக் டூ பேக்’ பின்னி யிருக்கிறார்.

ஒரு இடைவெளிக்குப் பிறகு சூர்யா தனது வசூல் களத்தை மீட்டுக்கொள்வ தற்கான கமர்ஷியல் களம் அமைந்துவிட, அதைத் திறம்படப் பயன்படுத்திக் கொண் டிருக்கிறார்.

என்றாலும் சூர்யா போன்ற சமூகப் பொறுப்புமிக்க ஒரு நடிகர், தேசப்பற்றை யும், விவசாயத்தையும் பற்றிப் பேசும் படத்தில், காதல் காட்சி, கமர்ஷியல் என்ற போர்வையில் இரண்டாம் தர மான இரட்டை அர்த்த வசனங்களைப் பேசுவது ஏற்கும்படியாக இல்லை.

பிரதமர் சந்திரகாந்த் வர்மாவாக மிடுக்கான தோற்றத்தில் மலையாளத் தமிழ் பேசியபடி வருகிறார் மோகன்லால். பிரதமர் என்றால் நாடு குறித்து மட்டுமே சிந்தித்துக்கொண்டிருப்பார், முந்தைய ஆட்சியைக் குறைகூறிப் பேசுவார் என்கிற வழக்கமான சித்தரிப்புடன், அதைச் சற்று கடந்து சென்று, குடும்பத் தலைவர், நண்பர், ஆலோசகர், அந்நிய நாட்டு மக்களையும் நேசிப்பவராக முகம் காட்டும்போது வசீகரித்துவிடுகிறார்.

ஆனால், வில்லன் தன் அருகிலேயே இருப்பது தெரிந்தும் அவர் மீது நட வடிக்கை எடுக்கமுடியாமல் நாட்டின் மிக உயரிய பதவியில் இருப்பவராகக் காட்டியிருப்பது அவரது கதாபாத் திரத்தைப் படுகுழியில் தள்ளிவிடுகிறது.

ஆர்யாவின் கதாபாத்திரம் தற்கால இளைஞர்களை கவரும் விதமாக வார்க்கப்பட்டுள்ளது. என்னதான் சூழ்நிலையால் பிரதமர் ஆனவர், துடிப் பான இளைஞர் என்று காட்டினாலும், அவரை மது மற்றும் கொண்டாட்ட விரும்பியாக சித்தரித்தது எடுபட வில்லை.

அப்பாவைக் கொன்றவருடன் ஆர்யா டீல் பேசும் காட்சி, சிரிப்பை வரவழைக்காத நகைச்சுவைக் காட்சி ஆகிவிடுகிறது. இருப்பினும் கொடுத்த வேலையை கச்சிதமாகச் செய்திருக் கிறார் ஆர்யா.

நாயகி சாயிஷா, நவீன ஆடைகள் அணிந்து கவர்ச்சி பொம்மையாக வலம் வருகிறார். வில்லன்களாக நடித்திருப் பவர்களில் பூமன் ஈரானி புத்தியால் மிரட்டினால், புத்தி, கத்தி இரண்டாலும் மிரட்டியிருக்கிறார் சிராக் ஜானி.

வைரமுத்துவின் வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் ஒலிக்கும் ‘விண் ணில் விண்மீன் ஆயிரம்’ பாடல் தேசத்தின் ‘வேற்றுமையில் ஒற்றுமையை’ உணர்வு பூர்வமாக தூக்கிப்பிடிக்கிறது.

கார்ப்பரேட்களின் பார்வையில் விவசாயத்தையும், ஒரு விவசாயியின் பார்வையில் கார்ப்பரேட்களையும் திறம்படக் கையாள்கிறது படம். அதே நேரம் கதாநாயகனின் முன்கதை, அவரது வீரதீரம் ஆகியவற்றை நிறுவ, காஷ்மீர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் என்று கதைக் களத்தின் எல்லைதாண்டிக் குதித்துச் செல்வதில் களைப்படைய வைத்துவிடுகிறான் இந்தக் ‘காப்பான்’!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in